தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் வரும் 25ம் தேதி புதன்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இத்தகவலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை, கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவமுகாம் 14  ஒன்றியங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த மாதம் 2 ஒன்றியங்களில் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், காது மூக்கு தொண்டை, குழந்தைகள் நலம் ஆகிய பிரிவு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்றுகள் வழங்க உள்ளனர்.

டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதன்படி தஞ்சை ஒன்றியத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 20-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை), கும்பகோணம் கே. எம். எஸ். எஸ். வளாகத்தில் வருகிற 25-ந்தேதியும் (புதன்கிழமை) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் தஞ்சை மாவட்டத்தில் இதுநாள்வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





பொங்கல் போட்டி பரிசளிப்பு விழா

கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சி மூப்பனார் நகரில் பொங்கலை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சி மூப்பனார் நகரில் நகர் நலச் சங்கத்தின் சார்பில் பொங்கலை ஒட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில்  வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்.எல்ஏ., சாக்கோட்டை க. அன்பழகன் பரிசுப் பொருட்களை வழங்கி, பாராட்டினார். இதில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத் பெருந்தலைவரும், கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாருமான கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீ. செல்வகுமார், பகுதி செயலாளர் ஆர். கே. சண்முகம், வார்டு உறுப்பினர் மகேந்திரன், மற்றும் இளைஞர் அணியினர், நகர் நலச் சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.