காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடி ஆகும். இந்த நிலையில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு டெல்டா மாவட்டங்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்மணிகளை தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம்.



 

இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை தற்பொழுது அறுவடை முடிந்தவுடன் உடனடியாக நெல் மூட்டைகளை எடுத்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்து பின்னர் யார் முதலில் நெல் மூட்டைகளை கொண்டு வந்தார்களோ, அதனடிப்படையில் கொள்முதல் நிலையத்தில்  விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கொள்முதல் நிலைய அதிகாரியிடம் தங்கள் நிலத்திற்கான சிட்டா அடங்கல் கொடுத்து நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருவது வழக்கம். மேலும் சன்ன ரகம் 40 கிலோ மூட்டை 783.20 ரூபாய்க்கும், பொதுரகம் 40 கிலோ மூட்டை 767.20 ரூபாய்க்கும், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்றவுடன் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அதற்கான தொகை வரவு வைக்கப்படும்.



 

லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு: அதே நேரத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூலமாக தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய திட்டம்: இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை இனி விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edoc.in என்ற இணையதளம் வாயிலாக பெயர், ஆதார் எண், கிராமத்தின் பெயர், நிலத்தின் உரிமையாளர் பெயர், சிட்டா அடங்கள் உள்ளிட்டவைகளை பதிவு செய்த பின்னர் நிலத்தின் உரிமையாளரின் தொலைபேசி எண்ணிற்கு அதிகாரிகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த குறுஞ்செய்தியில் விவசாயிகள் எந்த கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டும், மற்றும் விற்பனை செய்யும் தேதி ஆகியவை தொலைபேசி எண்ணிற்கு வரும். அந்த தேதியில் நேரடியாக சென்று விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்யலாம். இதனால் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 



 

விவசாயிகள் எதிர்ப்பு: அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களை பொருத்தவரை அதிக அளவில் கோவில் நிலங்களும் குத்தகை சாகுபடி எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் சிறு குறு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லாத காரணத்தினால் தான் நேரடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாத விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாமல் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகவே தமிழ்நாடு அரசு எப்பொழுதும் போல் உள்ள நடைமுறையை பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். திமுக அரசின் இந்த முடிவை அதிமுகவும் எதிர்த்துள்ளது.