தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நீர்வள மற்றும் உணவு பதன தொழில் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பேசுகையில்,


நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் நாம் உணவை பதப்படுத்தும் நிலைக்கு வளர்ச்சி அடைந்துள்ளோம். தேசத்தின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு நாம் நிறைவு செய்துள்ளோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதை கருத்தில் கொண்டு உணவு பதப்படுத்துதலுக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. ஒரு வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் ஒரு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். உணவு என்பது நம் அனைவருக்கும் மிக முக்கியமானவை. அதை நமக்காகவும், நாட்டுக்காகவும் எந்த அளவுக்கு உற்பத்தி செய்கிறோம் என்பதில் தான் தேசிய வளர்ச்சி உள்ளது.




உணவு உற்பத்தியை நமக்காக செய்யும் போது, அதிமாகும் நிலை ஏற்படும் போது, ஏற்றுமதிக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறோம். பிரதமர் மோடி உணவு பதப்படுத்தும் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதில் ஏற்படும் பிரச்சினைகளை கையாள அரசு தயாராக உள்ளது. தொழில் நுட்ப அளவில் மாற்றம் செய்தால், அதற்கான கட்டமைப்பு மத்திய அரசு வழங்கவும் தயாராக உள்ளது. உற்பத்தி செய்யும் உணவுகளை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். உலக அளவில் நாம் உணவு உற்பத்தியில் முன்னேற வேண்டும்.


தேசத்தின் எதிர்பார்ப்பை உணவு பதன தொழில் நிறைவேற்றி வருகிறது. உணவு ஏற்றுமதியில் எந்த அளவுக்கு இருக்கிறோமோ? அதைப் பொருத்து உலக அரங்களில் நமக்கான முக்கியத்துவம் அமையும். எனவே, உணவுத் தொழிலில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகக் கொண்டு வர வேண்டும்.  உணவு பதன தொழிலில் உலக அளவில் நாம் முன்னேற்றமடைய வேண்டும். தமிழ்நாட்டில் பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்றவை இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. தில்லியிலிருந்து உணவு பொருள்களை இங்கு கொண்டு வரும்போது பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. இங்கேயே உற்பத்தி செய்து, இங்கு பயன்பாட்டுக்குக் கொண்டு வரும்போது அனைவருக்கும் உணவு கிடைக்கும். உற்பத்தியான உணவு பொருள்களும் வீணாவதைத் தவிர்க்க முடியும்.




உணவு பதனத் தொழில் துறை நம் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உற்பத்தி செய்த உணவு பொருள்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது, உலக அரங்கில் நாம் வளர்ச்சி பெற்றதை உணர முடியும்.  இத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. சமுதாயத்தின் முழுமையான பங்களிப்பு இருந்தால்தான் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்த்து, லாபத்தைப் பார்க்க முடியும். இத்தொழிலில் உழவர்கள் லாபத்தை அடைவதற்கான உதவிகளை அரசு செய்கிறது. நமது உற்பத்தியும், உற்பத்தி திறனையும் வளர்த்துக் கொண்டோமானால் உலக அரங்கில் நம்நாட்டை திரும்பி பார்க்க வைக்க முடியும். உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டும் பொருளாக  மாற்றுவதற்கு அரசு பல்வேறு விதமான மானியங்களை வழங்குகிறது.


ஒரு மாவட்டத்தில் அதிகம் விளையக்கூடிய ஒரு பொருளை கண்டறிந்து அந்த பொருளை அதிகளவில் உற்பத்தி செய்தால், அப்பொருளில் மதிப்பு கூட்டி, உணவை பதப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்ய முன் வருகிறது. இதனை உழவர்களும், உற்பத்தியாளர்களும் நல்ல முறைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உணவு பதன தொழிலில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நஷ்டம் ஏற்படாது. எனவே, பிரச்னையிலிருந்து தப்பிக்க வேண்டும். நம் நாட்டில் உற்த்தியைப் பெருக்கி முன்னேற்றமடைவோம் என்றார். முன்னதாக, இரு உணவுத் தொழில் நிறுவனங்களுக்குத் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டன. மேலும், 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர்  அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, மத்திய நீர்வள மற்றும் உணவு பதன தொழில் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், தஞ்சாவூர் பெரியகோயில், மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் உணவு பொருட்கள் தயாரிப்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டம் குறித்து பார்வையிட்டு, தொடங்கி வைத்தார். பிள்ளையார்பட்டி ஊராட்சியிலுள்ள சுகாதார வளாகத்தை பார்வையிட்டார்.