பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தஞ்சாவூர்  மாவட்டத்திலுள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு 2 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 10 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்ய கூடிய ஆக்சிஜன் பிளாண்ட் உள்ளது. தற்போது மத்திய அரசின் சார்பில் பிஎம்.கேர்ஸ் நிதியிலிருந்து 1 கோடி மதிப்பீட்டில் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யக்கூடிய கூடம் நிறுவப்பட்டது.  இதனை  பயன்பாட்டுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் கோ.ரவிக்குமார், மருத்துவமனை நிலை அலுவலர் செல்வம் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் எம்பி பழனிமாணிக்கம் செய்தியாளர்களை சந்திகையில்,



தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் இங்குள்ள மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி, உயிரிழப்புகளின் சதவீதத்தை குறைத்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி, தன்னார்வ அமைப்புகள், அரசு நிதியை கொண்டு 10 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யக் கூடிய ஆக்சிஜன் உற்பத்தி கூடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருவதால், அவர்களுக்கு தேவையான படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் செறிவூட்டிகளும் தேவையான அளவு உள்ளது. தற்போது பிஎம்.கேர்ஸ் நிதியிலிருந்து ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎம்.கேர்ஸ் நிதியிலிருந்து 25 வெண்டிலேட்டர் அமைக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசின் வழிகாட்டுதலோடு மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசியை தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசியை அதிகளவில் செலுத்தும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு கூடுதல் தடுப்பூசியை தேவைக்கு ஏற்ப வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.



இதே போல் கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின்கீழ் ஆக்ஸிசன் உற்பத்தி மையத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அருகில், வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் கமருல்ஜமான் அவர்கள், நிலைய மருத்துவர் மருத்துவர் பிரபாகர்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக வந்து செல்கின்றனர். திருவாரூர், நாகப்பட்டிணம், காரைக்கால், கடலுார், அரியலுார் உள்ளிட்ட  மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வருகின்றனர். கும்பகோணம் மருத்துவமனையில் 1 கோடி மதிப்பில், ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மூன்றாவது கொரானோ அலை வந்தாலும், சமாளிக்ககூடிய வகையில், அனைத்து முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.