திருவள்ளூவர் பல்கலைகழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அசோகன். இவர் திருவாரூர் மாவட்டம் மேல எருக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 20 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. மேலும் அவர் பணியாற்றிய காலத்தில் பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அசோகன் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக கூறி ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை அசோகன் அவர்களுடைய உறவினர் வீடு திருவாரூர் அருகே மேலே ஏருகாட்டூர் கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டிற்கு திடீரென வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கு உள்ளவர்களை வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்காமல் வீட்டின் வாசலின் கதவை பூட்டி உள்ளே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பொழுது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் மேலும் இவர் எந்தெந்த விஷயங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து அவர்களுடைய உறவினர்களிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மையப்பன் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஆணை வடபாதி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பாபு என்பவருடைய தந்தை சாரங்கன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா கோரி கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்து இருந்தார். இதற்கு பட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் சாரங்கன் மகன் மனோஜ் பாபுவிடம் 3000 முதலில் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் 3000 வாங்கிக்கொண்டு பட்டா வழங்காமல் மீண்டும் 18 ஆயிரம் ரூபாய் கிராம நிர்வாக அலுவலர் பணம் கேட்டுள்ளார். அதனை அடுத்து மனோஜ் பாபு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ரசாயனம் தடவிய பணத்தை மனோஜ் பாபுவிடம் கொடுத்து பாலசுப்பிரமணியனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.
அதனடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரிடம் பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பாலசுப்பிரமணியனை பிடித்தனர். அவரிடமிருந்து ரசாயனம் தடவிய 18 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சாரங்கன் இடத்திற்கான பட்டா ஆகியவை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று ஒரேநாளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அதிகாரி வீடு மற்றும் அரசு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.