காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று போக சாகுபடிகளான குறுவை, சம்பா, தாளடி போன்ற நெற்பயிர் சாகுபடிகள் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக நடப்பாண்டில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு, தற்போது அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல சம்பா சாகுபடியை பொருத்தவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 800 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தாளடி சாகுபடியை பொருத்தவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து முன்னூற்று அறுபது ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சம்பா சாகுபடி பயிர்களுக்கு அடி உரம் தெளிக்க வேண்டிய அவசியத்தில் விவசாயிகள் உள்ளனர்




குறிப்பாக யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற அடி உரங்களை 30 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா பயிர்களுக்கு தெளித்தால் தூர் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் மாவட்டம் முழுவதும் இந்த மூன்று உரங்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மானிய விலையில் அரசு சார்பில் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது உரங்களின் கையிருப்பு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கான யூரியாவின் தேவை 16 ஆயிரத்து 376 மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆனால் தற்போதைய கையிருப்பு 2956 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது. இதேபோல டிஏபி இன் தேவை 6 ஆயிரத்து 764 மெட்ரிக் டன்களாக உள்ளநிலையில் 2030 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பில் உள்ளது. பொட்டாஷ் உரத்தின் தேவையும், கையிருப்பும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளது.




முதற்கட்டமாக 40 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு அடி உரங்கள் இட வேண்டிய தேவையில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் உரங்களின் தட்டுப்பாடு விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா காரணத்தினால் விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு, அதேபோல பொருளாதார பாதிப்பு என பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாடு விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரத்தட்டுப்பாடு தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கையிருப்பில் உள்ள உரங்களை தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்து அளித்து வருவதாகவும், தேவையான உரங்களை பெற்றுத்தர தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். உரம் போன்ற இடுபொருட்களின் விற்பனை என்பது மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தேவையான உரங்களை பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.