தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள்  குறைந்து வருகிறது. கடந்த மே 21ஆம் தேதியில் இருந்து தினசரி புதிய பாதிப்புகள் இறங்குமுகமாக இருப்பது மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதிதாக 2 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3,021 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது 30 ஆயிரத்து 600 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேகத்தில் பாதிப்புகள் குறைந்தால் இன்னும் இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.




இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மத்திய, மாநில அரசுகள் கூறுகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்தினால் மூன்றாவது அலை வருவதை தவிர்க்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கேற்ப கடந்த சில மாதங்களாகவே தடுப்பூசி மீதான ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் கொடுத்த எச்சரிக்கையும் ஒரு காரணம் அமைந்தது என்றும் சொல்லலாம். தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை தான் தமிழக அரசு பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறது.




தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1 கோடியே 86 லட்சத்து 82 ஆயிரத்து 363 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்த குறைவான தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் இருந்து வருகிறது. இதனால் தடுப்பூசி மையங்களில் நாள் ஒன்றுக்கு செலுத்தும் தடுப்பூசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லுகின்றனர்.




இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வலிவுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையைத்தில் காலியான ஊசிகளை  பாரத பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பி தந்தைபெரியார் திராவிட கழகத்தினர் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும், தடையின்றி மாநில பாரபட்சம் இன்றி மத்திய அரசு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்கவும், ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தடுப்பூசிக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை மனுவை நூதன முறையில் காலி ஊசிகளுடன் தபால் மூலம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.