தமிழகத்தில் முதன்முறையாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் வரும் நிதி நிலை அறிக்கையில் தாக்கல் செய்யப்படவுள்ளதால், அது தொடர்பாக கருத்துகளை விவசாயிகளிடம் பெறும், கருத்து கேட்பு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு கொறடா கோவி.செழியன், எம்பி செ.ராமலிங்கம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள எம்எல்ஏக்கள், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை துறை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை ஆணையர் எவள்ளலார், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தஞ்சாவூர், திருவாருர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் "தமிழகத்தில் முதன்முறையாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், அந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய கோரிக்கைள் குறித்து 35 விவசாயிகள் பேசி, அதற்கான கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் 50 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தவேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இரசாயண உரங்களை தடை செய்ய வேண்டும். வேளாண் இடுபொருட்களான மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களை அதிகஅளவில் விவசாயத்தில் ஈடுபடுத்தும் வகையில், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் வேளாண்மைக்கு நவீன இயந்திரங்களான அறுவடை இயந்திரம், நடவு இயந்திரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
நீர்மேலாண்மையை அதிகப்படுத்தும் வகையில், ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும். தடுப்பணைகளை அதிகளவில் கட்டவேண்டும். குறுவை, சம்பா சாகுபடிக்கு ஏற்ற வகையில் புதிய நெல் ரகங்களையும், விதைகளையும் அறிமுகம் செய்ய வேண்டும், உற்பத்தி பொருட்களை பாதுகாக்க கிராமங்கள் தோறும் கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து மனுவாக கொடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை கருத்துகளை பெற முதலில் தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த கூட்டம், தொடர்ந்து தமிழ்நாடு முழவதும் நடைபெற்று விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து அதன்பின்னர் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்படும். தஞ்சாவூரில் காலையில் 9.20மணிக்கு தொடங்கிய இந்த கருத்து கேட்பு கூட்டம் பிற்பகல் 3 மணி வரை தொடர்ந்து இடைவேளை இல்லாமல் நடைபெற்றதில் விவசாயிகள் ஆர்வத்துத்துடன் பங்கேற்றுள்ளதால், இந்த கூட்டத்தின் மூலம், நல்ல பட்ஜெட்டாக உருவாகும் சூழல் இருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
நெல்லில் ஈரப்பதத்தைக் குறைக்கும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்கி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதேபோல மழையில் நெல் நனையாமல் இருப்பதற்கு தார் பாய்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொள்முதல் செய்த மழையில் நனைவதாக இருந்த 1.57 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளில் மூன்றே நாளில் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.