தஞ்சாவூர்: தஞ்சையில், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர் போக்குவரத்து போலீசார். 


தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுறுத்தலின் பேரில் தஞ்சையில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் மணிமண்டபம் அருகே அதிரடியாக இருசக்கர வாகன சோதனை நடத்தினர். 


அப்போது அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் சரியான முறையில் உள்ளதா. மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் வடிவமைக்கப்பட்டுள்ளதா? ஹெல்மெட் அணிந்துள்ளார்களா என்பவை குறித்து சோதனை செய்தனர்.


இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000 அபராதமும், அதனை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதமும், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் படி நம்பர் பிளேட் வடிவமைக்காதவர்களுக்கு அதாவது நம்பர் பிளேட்டில் நம்பரை தவிர வாசகம் எழுதி இருத்தல், நம்பர் இல்லாமல் வெறும் வாசகம் மட்டும் எழுதி இருத்தல், வாகனத்தின் ஒரு பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறை மீறல்கள் செய்தவர்களுக்கு ரூ.1000 மற்றும் இருசக்கர வாகனத்தில் இருவரை தவிர கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.




மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே நாளில் ஹெல்மெட் அணிந்து வராதது குறித்து 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.


இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும்.


இவற்றில் முரண்பாடு இருந்தால் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மற்றும் அதனை புதுப்பிக்க தவறியவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம். முறையாக அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறோம். நகரில் அனைவரும் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அரசின் வழிகாட்டுதல்படி நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 50,51ஐ மீறும் வகையில்எதிராக வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்களின் பெயர், படங்களை நம்பர் பிளேட்டில் ஒட்டிக் கொள்கிறார்கள். 


மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதிவு எண்களை வித்தியாசமான வடிவங்களில் எழுதி கொள்கின்றனர். இது சட்டவிரோதமானது. மேலும் வாகனங்களின் பதிவெண்களில் ஏதாவது ஒரு எண்ணை பெரியதாக எழுதி மற்றவற்றை சிறியதாக எழுதி வைத்துள்ளனர். இவை அனைத்தும் சட்ட விரோதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.