தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த தொழில் முதலீடுகள் மாநாட்டில் 37 பயனாளிகளுக்கு  ரூ.14.52 கோடி மதிப்பிலான கடனுதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.


தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T) கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று நடந்தது. இம்மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொழில்முனைவோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.


மாநாட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் 37 பயனாளிகளுக்கு ரூ.14.52 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி விழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசு தொழில்முனைவோர்களுக்காக பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் 3411 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. 14 வட்டாரங்கள், 8 தாலுக்காக்கள், 589 கிராம பஞ்சாயத்துக்கள், 22 நகர பஞ்சாயத்துக்கள், 3 நகராட்சிகள், 2 மாநகராட்சிகள், 906 வருவாய் கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. 


தஞ்சாவூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் மொத்தமாக 37925 தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சிறு நிறுவனங்களில் மொத்தம் 103 உள்ளன. தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடானது நமது மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது மாநாடு ஆகும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM) சென்னையில் ஜனவரி 2024 இல் நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்தார். 




தமிழ்நாட்டில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை எடுத்துரைத்து மற்றும் தேவையான வசதிகள், வாய்ப்புகளை ஏற்பாடு செய்து கேட்டுக்கொண்டதற்கிணங்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு தொழில் துவங்க ஆர்வமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழகம் முழுவதும் உள்ளுர் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு தமிழ்நாட்டிற்கு 66 ஆயிரம் கோடி முதலீடுகளை திரட்டவும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரு.1092 கோடிக்கு திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 34 நபர்களுக்கு மானியம் வழங்கி தொழில் துவங்கப்பட்டுள்ளது.  


உலகமுதலீட்டாளர்கள் சந்திப்பு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது. தஞ்சாவூருக்கு ரூ.1092 கோடி திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


பின்னர், மேலவஸ்தாசாவடியில் டைடல்  பார்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள்  நடைபெற்று வருவதை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


மாநாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி,  துணைத் தலைவர் முத்து செல்வம்,  NIFTEM-T இயக்குநர் பழனிமுத்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் நடேஷ்குமார், கனரா வங்கி கோட்ட மேலாளர் ராம்தாஸ் மூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி பிரதீப் கண்ணன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் விஜயகுமார் மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.