தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை காதலன் வழிமறித்து கத்தியால் வெட்டி படுகொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே மேல களக்குடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகள் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (29). பெயிண்டர். காவியாவும், அஜித்குமாரும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் காவியா, அஜித்குமாரை காதலித்து வந்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காவியாவை அவரது பெற்றோர் வற்புறுத்தி,  உறவினருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். 

Continues below advertisement

இந்த விவரத்தை காவியா, அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்து உள்ளார். இதே போல் நேற்று இரவு 8 மணிக்கு இருவரும் செல்போனில் வீடிோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு காவியா அனுப்பி உள்ளார்.  

இதனால் அஜித்குமார் அதிர்ச்சியடைந்து காவியா மீது கோபத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று (27ம் தேதி) காலை காவியா பள்ளிக்கு தனது ஸ்கூட்டில் சென்று கொண்டு இருந்தார்.  மாரியம்மன் கோவில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது காவியாவின் ஸ்கூட்டரை அஜித்குமார் வழிமறித்துள்ளார். பின்னர் நிச்சயதார்த்தம் ஆனதை ஏன் கூறவில்லை. அப்போ என்னை மறந்து விட்டு வேறு ஒருவருடன் உனக்கு திருமணம் நடக்க போகிறதா என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் அஜித்குமார் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த காவியா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அஜித்குமார் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தகவலை கூறி சரணடைந்துள்ளார். 

தொடர்ந்து அம்மாபேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று காவியாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை வழக்கு தொடர்பாக பாபநாசம் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் காலை வேளையிலேயே நடந்த இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.