தஞ்சாவூர்: பெண்ணை ஆபாச முறையில் பேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Continues below advertisement

தஞ்சையை சேர்ந்த பெண் ஒருவர், தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 22-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகளின் புகைப்படத்தை ஆபாசமான முறையில் பேஸ்புக்கில் பதிவிட்டு, அதன் கீழே ஆபாசமான செய்தியுடன், மகளின் செல்போன் எண்ணையும் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பேஸ்புக்கில் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டது தஞ்சையை அடுத்த நடுக்கடையை சேர்ந்த ஆசிக்அலி (31) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டபோது அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

Continues below advertisement

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று ஆசிக்அலியை கைது செய்து தஞ்சை முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை முடிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு விசாரணை செய்து, ஆசிக்அலிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரவணகுமார் ஆஜராகி வாதாடினார்.

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

திருக்காட்டுப்பள்ளியில் இறைச்சி கடைகாரர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இறைச்சி கடைக்கார் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில்  நடுப்படுகை தெருவில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளங்கோவன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில், கடந்த 5.10.2021-ம் தேதி இளங்கோவன், மகன்கள் ஆனந்தராஜன் மற்றும் உறவினர் நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து செல்வம் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அரிவாளால்  கழுத்தில் வெட்டியுள்ளனர். 

இதில் காயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்து விட்டார். இதுகுறித்து செல்வம் மனைவி வேதவள்ளி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஆனந்த கிருஷ்ணன்(23), நாகராஜன்(23) மற்றும் இளங்கோவன்(50) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கினை விசாரணை செய்த தஞ்சாவூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வழக்கின் எதிரியான இளங்கோவன்(50) இறந்து விட்ட நிலையில் மற்ற குற்றவாளிகளான ஆனந்த கிருஷ்ணன்(23) மற்றும் நாகராஜன்(23) ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் வழங்கி தீர்ப்பு கூறினார்.