முயற்சி உடையவனின் வளர்ச்சியை யார் நினைத்தாலும் தடுக்க இயலாது. சூரியனின் ஒளிக்கதிரை கைகொண்டு மறைத்திட இயலுமா? அதுபோல்தான் முயற்சி உடையவர்களை புதைத்தாலும் விதையாக மாறி மரமாக முளைத்து எழுந்து நிற்பார்கள். தொடங்கும் இடத்தில் இருந்து பார்க்கும்போது பாதை முடிவதுபோல தெரியும். அது முடிவல்ல முயற்சியும், நம்பிக்கையும் கொண்டு பயணத்தை தொடர்ந்தால் இலக்கு தெரியும்.
நம் பாதை இதுவென்று புரியும். முடியும் என்று தெரிந்தால் முயற்சி செய்யாமல் இருக்கவே கூடாது. முடியாது என்று நினைத்தால் பயிற்சி எடுக்க வேண்டும் முயற்சி செய்வதற்கு. அப்போதுதான் வெற்றி நம் வசப்படும். சிக்கல்கள் வாழ்க்கையில் வருவதற்கு காரணம் நம்மை சிதைக்க அல்ல... சிறப்பான வாழ்க்கைக்கு செதுக்க என்று நினைத்தால் சாதனைக் கொடியை நாம் ஏற்றுவது வெகு தூரத்தில் இல்லை.
உன்னை ஏளனம் செய்து தூக்கி வீசிபவர்கள் முன்பு நீ தூசி அல்ல சிகரம் என்பதை உணர்த்த உயர்ந்த நிற்க வேண்டும். அடுத்த தடவை அவர்கள் உன்னை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு. இதற்கான வெற்றி நம் உழைப்பில்தான் உள்ளது. ஒரு செயலை செய்ய விரும்பும்போது பேசுவதை நிறுத்திவிட வேண்டும். அடுத்த தடவை பேசும்போது அந்த செயல் சாதனையாக செய்து முடித்து இருக்க வேண்டும். இதுவே உண்மையான உழைப்பின் முதல் படிக்கட்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
உண்மையான வளர்ச்சியின் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா? உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளும் போதுதான் வளர்ச்சியின் அளவு அதிகரிக்க தொடங்குகிறது. எனவே குறைகளை களைந்து வெற்றியை நோக்கி வேக நடைபோட வேண்டும்.
உங்களுக்காக நீங்கள்தான் சிந்திக்க வேண்டும். அது தவறாக இருந்தாலும்... அடுத்தமுறை சரியாக சிந்திக்க முடியும். 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி' என்றார் பாரதி : இவற்றை இந்த இள வயதிலேயே செயல்படுத்துகிறார் மாணவி ஹாசினி
அதுபோல் முயற்சியை கைவிடாமல் சிலம்பம் சுற்றுவதில் ஏராளமான சாதனைகள் பல புரிந்து விருதுகளையும், வெற்றி கோப்பைகளையும் பெற்று பாராட்டுக்களை குவித்து வருகிறார் தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (நீலகிரி) 8-ஆம் வகுப்பு மாணவி கே.ஹாசினி. அப்பா கே.கார்த்திகேயன். சுயதொழில் புரிகிறார். அம்மா ஸ்ரீதேவி. வல்லத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். தம்பி கைலாஷ். மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.
மின்னலை விட வேகமாய், காற்றை கிழிக்கும் ஓசையை உணர முடிகிறது ஹாசினியின் கரங்களில் சுற்றும் சிலம்பத்தில் இருந்து. மாணவி ஹாசினியின் வெற்றிப்பயணத்தில் சில... 15.8.21 அன்று தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று அசத்தி விருதையும், சான்றிதழையும் வென்றுள்ளார். இதேபோல் கடந்த 2021 டிசம்பர் மாதம் 17,18,19ம் தேதிகளில் கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதல் பரிசு பெற்று கோப்பையை தன்வசப்படுத்தி உள்ளார்.
கடந்த 18.01.2022 மதுரையில் நடந்த சோழன் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நடத்திய தொடர் சிலம்பம் சுற்றுதலில் 17.01.2022 காலை முதல் 18.01.2022 மாலை 4.00 மணி வரை சிலம்பம் சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து தன் பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளார் மாணவி ஹாசினி.
இதேபோல் கடந்த 4.6.2022ல் கொடைக்கானலில் சர்வதேச அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை தட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். விருதும், சான்றிதழும் பெற்று அசத்தி உள்ளார்.
26.12.2022 நடந்த மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். இதேபோல் கடந்த 6.5.2023 மற்றும் 7. 5.2023 திருச்சியில் நடந்த ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிலம்பம் மராத்தானில் பங்கேற்று 23 மணி 23 நிமிடங்கள் சிலம்பம் சுற்றுதல் போட்டியில் கலந்துகொண்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
திடமான நம்பிக்கையுடன் திறமையும், முயற்சியும் கைகோக்கின்றபோது வெற்றி வசப்பட்டு விடும் என்பதைப்போல் ஹாசினி சிலம்பம், கராத்தே போட்டிகளில் மேலும், மேலும் உழைப்பையும், முயற்சியையும் கொடுத்து வெற்றிக்கனியை பறித்து கொண்டே இருக்கிறார். மிக சிறிய வயதில் பெரிய அளவில் சாதனை புரிந்து தன் பள்ளிக்கு பெருமையை சேர்த்து வருகிறார்.
தனியார் பள்ளிகளை மிஞ்சி, கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் முன்னிலை பெற்று வரும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ப.மூர்த்தி, மாணவியின் வெற்றிகள் பற்றி கூறுகையில், வெற்றியை நோக்கிய பயணத்தில் சிலமுறை வாய்ப்புகள் நழுவும் போது மனதில் சோர்வும், தயக்கமும் வந்து அமர்ந்து விட இடம் கொடுக்கக்கூடாது. அதை உடைத்தெறிந்து முன்னேறும் போதுதான் வெற்றியின் பாதை புலப்படும். அதுபோல் மாணவி ஹாசினி தளராத முயற்சியால் இன்று பெரிய அளவில் சாதனைகள் படைத்து வருகிறார்.
கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, பாடல் பாடுவது என ஏதேனும் ஒரு திறமை குழந்தைகளிடம் நிச்சயம் இருக்கும். குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து வெளிக்கொணர்வதுதான் பெற்றோர், ஆசிரியர்களின் தலையாய கடமை. அவர்களின் ஆர்வம், திறமைகளை கண்டறிந்து முதலில் ஊக்குவிக்க வேண்டும். செய்த பின்பு பாராட்ட வேண்டும். அதுபோல்தான் எங்கள் பள்ளியின் மாணவ, மாணவிகளின் திறமைகளை கண்டறித்து ஊக்கப்படுத்தி வருகிறோம். சாதனை படைக்கும் மாணவி ஹாசினியால் எங்கள் பள்ளிக்கு பெருமை கிடைத்து வருகிறது.
மாணவி ஹாசினி இன்னும் பல சாதனைகள் புரிவார் என்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார். மாணவியை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம், ஆசிரியை அங்கையர்க்கன்னி மற்றும் பிற ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.