தஞ்சாவூர்: தஞ்சாவூரின் மற்றொரு பெருமையாக மாற உள்ளது சமுத்திரம் ஏரி என்றால் மிகையில்லை. அந்தளவிற்கு சமுத்திரம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


250 ஆண்டுகள் இடைக்கால சோழ பேரரசின் தலைநகராக தஞ்சாவூர்  விளங்கியது. புகழ் பெற்ற சோழ மன்னர்களான விஜயாலய சோழன் முதல், முதலாம் ராஜராஜ சோழன் வரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த நகர் என்ற பெருமையை உடையது தஞ்சாவூர்.


சோழ பேரரசின் பின் தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் மராட்டிய மன்னர்களின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது. தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. இதனால்தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது.


தஞ்சாவூர் என்றாலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்தான். சுற்றுலாப்பயணிகளின் முக்கிய தேர்வாக தஞ்சாவூர் பட்டியலில் இடம் பிடிக்கும். காரணம். உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில், தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா, பீரங்கி மேடு என்று ஏராளமான வரலாற்று சிறப்புகள் தஞ்சாவூரில் அடங்கி உள்ளது.




அந்த வகையில் தஞ்சாவூருக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம் சமுத்திரம் ஏரி. தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது இந்த சமுத்திரம் ஏரி. தஞ்சையில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. பழமையான இந்த சமுத்திரம் ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஏரி புனரமைக்கப்பட்டது. அவர்களுடைய காலத்தில்தான் இதற்கு சமுத்திரம் ஏரி என்ற பெயர் வந்தது.


பார்ப்பதற்கு பிரமாண்டமாக கடல் போல் காட்சியளிப்பதால் சமுத்திரம் (கடல்) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மராட்டியர் காலத்தில் இது முக்கிய ஏரியாக விளங்கி உள்ளது. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று வந்துள்ளனர். தஞ்சாவூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்த ஏரி.


இதன் மூலம் புன்னைநல்லூர், கலக்குடி, கடகடப்பை, கரம்பை, கொடிக்காலூர்,  அருள்மொழிப்பேட்டை, புளியந்தோப்பு உள்பட பல கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. தஞ்சாவூர் நகரின் வடிகாலாகவும் இந்த ஏரி இருந்தது. இந்த ஏரியில் கோடைக்காலம் உள்பட எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும்.


இந்த ஏரியில் தற்போது பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. படகுசவாரி, சிறுவர் பூங்கா, சமுத்திர ஏரியில் பறவைகள் தங்கி குஞ்சு பொரிக்கும் வகையில் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடம் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை சுற்றி பார்க்கும் வகையில் படகு சவாரியும் விடப்பட உள்ளது. சிறுவர் விளையாட்டு பூங்கா, வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.