பாட்டு, நாட்டுப்புற நடனம், பன்முகத் திறமை என்று வெற்றிநடை போட்டு பரிசுகளை குவிக்கும் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பற்றிய தொகுப்புதான் இது.

திறமை என்பது அனைவரிடத்திலும் விதைக்கப்பட்டு, ஒளிந்து கொண்டிருக்கும் உன்னதமான விஷயம். தக்கத் தருணங்கள் திறமை என்ற விதையை விருட்சமாக்குகிறது. பயிற்சியும், முயற்சிகள் இரு கண்களாக இருந்தால் மட்டுமே உயர்வு என்ற உயர்ந்த சிகரத்தில் நம் வெற்றிக் கொடி பறக்கும்.

கோடிக்கணக்கான மக்கள் எண்ணிக்கையில் ஒருவராக இருப்பதை விட உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு கடுகாய் இருந்தாலே பெருமைதானே. புகழ்ச்சிகளால் வளர்ச்சி பெறுபவர்களுக்கு கடைசியில் ஒன்றும் மிஞ்சுவதில்லை. முயற்சியில் வளர்பவருக்கு உலகே துணையாக நிற்கும். தன்னம்பிக்கையை பக்கத் துணையாக இருக்கும்.

அப்படி தங்களின் தனித்திறமைகளால் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை நோக்கி சிங்கப்பெண்களாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கும் வல்லம் மாதிரி அரசு பெண் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பற்றி பார்ப்போம்.





யாரிடமும் கற்றதில்லை. முயற்சி செய்தேன் முன்னேற்றம் அடைகிறேன் என்று சொல்லாமல் சொல்கிறார் 10ம் வகுப்பு மாணவி ர.சு.கனிமொழி (15). அப்பா ரமேஷ். அம்மா சுகுணா. மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். தங்கை கனிஷ்கா. 8ம் வகுப்பு படிக்கிறார். கணீரென்ற குரலால் நாட்டுப்புறப்பாடல், சினிமா மெட்டில் அமைந்த பாடல்களை அட்டகாசமாக பாடுகிறார்

இந்த தானே கற்று தேர்ந்த சின்னகுயில். இவரது திறமை மாவட்டம், மாநிலம் என்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. மெல்லிசையும் வரும்… நாட்டுப்புறப்பாடலும் நன்றாக வரும் என்று இனிமையான குரலில் தெரிவிக்கும் இம்மாணவி தஞ்சையில் நடந்த புத்தகத் திருவிழாவில் நாட்டுப்புறப்பாடல் பாடி முதல் பரிசை தனதாக்கி கொண்டுள்ளார். கலைத்திருவிழாவில் நாட்டுப்புறப்பாடலில் இரண்டாமிடம், மெல்லிசையில் இரண்டாம் இடம் என்று விருதும், சான்றிதழும் வென்றுள்ளார். கலைச்சாரல் சங்கமம் நிகழ்ச்சியில் இனிமையான குரலால் அனைவரையும் கவர்ந்து நாட்டுப்புற எழுச்சிக் குயில் என்ற பட்டமும் பெற்றுள்ளார். இதேபோல் மாவட்ட அளவில் நடந்த போட்டியில் குழுப்பாடல் போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளார். முக்கியமாக இவரது குரலின் இனிமை அறிந்து இயக்குனர் சேரன் தன் படத்தில் இம்மாணவியின் குரலில் பாடல் ஒலிக்கும் என்று உறுதி கூறியிருப்பதும் தனியாக குறிப்பிட வேண்டிய ஒன்று. வெற்றிகள் இனிமையான தன் குரலால் இழுத்து வருகிறார்.

இப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி ரா.ராகினி (17). அப்பா ராஜாராம். ஆம்புலன்ஸ் டிரைவர். அம்மா சுந்தரி. அண்ணன் ராஜ்கமல். தங்கை ராகவி 10ம் வகுப்பு மாணவி. ராகினின் கால்கள் தாளம் தப்பாமல் சுழன்றாடுகின்றன. மணிகளால் கோர்த்த சலங்கையின் தப்பாத ஒலி கேட்டு மண்ணும் ஆனந்த கூத்தாடும். பசியை மறந்து ரசித்து பார்க்க வைக்கும் நாட்டுப்புற நடனமாம் கரகம் அருமையால் வந்தடைந்துள்ளது ராகினியிடம் என்றால் மிகையில்லை. கால்கள் சுழன்றாடும் வேகத்தில் விழித்த கண்கள் வியப்படைவதும் இயற்கைதானே. கரகாட்டம், கும்மியாட்டம், கிராமிய நடனம் மட்டுமின்றி பன்முக திறமையாளராக மிளிர்கிறார் ராகினி ஓட்டப்பந்தயம், கபடி போட்டி, கோ-கோ, நீளம் தாண்டுதல், சிலம்பம் என்று தன் திறமைகளை பல விளையாட்டுகளிலும் காண்பித்து பதக்கம், பரிசுக்கோப்பை, சான்றிதழ்களை குவித்துள்ளார். இம்மாணவி மாவட்ட அளவில் நடந்த பன்முக பொழுது போக்கு நிகழ்ச்சியில் மூன்றாம் பரிசு, பள்ளி அளவில் 200மீ ஓட்டப்போட்டியில் முதல் பரிசு, சாரணிய முகாமில் பங்கேற்பு, நேரு யுவகேந்திரா நடத்திய போட்டியில் குழு நடனத்தில் முதல் பரிசு, கிராமிய நடனத்தில் இரண்டாமிடம், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

இதேபோல் மராத்தான் போட்டியில் பங்கேற்று சான்றிதழ், கபடி போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை என்று தன் வெற்றிக் கொடிகளை உயரே உயரே பறக்க விடுகிறார். மேலும் கோ-கோ போட்டியில் இரண்டாமிடம், கலை உத்சவ் நிகழ்ச்சியில் கிராமிய நடனத்தில் 2ம் பரிசு, கும்மி ஆட்டத்தில் 2ம் பரிசு, நடனப் போட்டியில் முதலிடம் என்று பன்முகம் காட்டி வெற்றியாளராக மிளர்கிறார். இது மட்டுமா சிலம்பம் எடுத்து சுற்றினால் விர்...ர்...ரும் என்று காற்றும் ஜதி பாடும் போல் வேகம் தெறிக்கிறது. இதை மட்டும் விடுவேனா என்று சிலம்ப போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.

இப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி பாக்கியலட்சுமி நாட்டுப்புற நடனத்தில் மிளிர்கிறார். முயற்சிகள் திருவினையாக்கும் என்பதுபோல் தன்னைத்தானே மெருகேற்றி நடனத்தில் தன்னை நிரூபித்து சாதனையாளராக திகழ்கிறார். இம்மாணவியின் அப்பா பழனிச்சாமி, அம்மா போதுமல்லி. கூலித் தொழிலாளி. அண்ணன்கள் ஜீவக்குமார். டிரைவர். பாலாஜி ஐடிஐ மாணவர். இம்மாணவி நடனத்தில் தனக்கென்று தனி சாதனைகளை படைத்து வருகிறார். கலைத்திருவிழாவில் நாட்டுப்புற நடனம் ஆடி அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்து பரிசு வென்றவர் சென்னையில் மாநில அளவில் நடந்த நடன போட்டியில் 2ம் இடம் பெற்று விருதை வென்றுள்ளார். இதே போல் கலைத்திருவிழாவில் நாட்டுப்புற நடனம் (தனி) முதலிடம், கரகாட்டத்தில் இரண்டாமிடம் என்று வெற்றி நடனமாடி வருகிறார். இதேபோல் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் பரிசும், சான்றிதழும் பெற்று சாதனைப்படைத்து வருகிறார்.

இந்த சிங்க பெண்களின் வெற்றி குறித்து பள்ளி தலைமை ஆசிரியை (பொ) செயலெட்சுமி கூறுகையில், தன்னம்பிக்கை என்ற விதையை விதைத்து இன்று வெற்றி என்ற விருட்சமாக மாறியுள்ள எம் பள்ளி மாணவிகளின் சாதனைகள் இன்னும் உயரும். இம்மாணவிகள் தங்களை தாங்களே செதுக்கி கொண்டு சிற்பமாக மிளர்கின்றனர். வீர மங்கைகளின் வெற்றிகள் மாநிலத்தை தாண்டியும் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இம்மாணவிகளால் எம் பள்ளி பெருமை பெற்று திகழ்கிறது என்றார்.