தாய் நாட்டில் பிறந்து பலரும் வெளிநாடுகளுக்கு சென்று செல்வம் சேர்த்த பின்னர் தன் தாய் நாட்டை பெரிதாக எண்ணாமல் அயல்நாட்டு பெருமைகளை பேசி தன் தாய் மண்ணை மறந்து, வெளிநாடுகளிலேயே வசித்து வரும் பலரைப் பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் ஒரு சில விதிவிலக்காக, தன் தாய் மண்ணையும் தன் பூர்வீக ஊர்களையும் மறக்காமல், கடல் கடந்து நெடு தூரம் சென்றாலும், தன் மண்ணிற்கு ஏதேனும் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றின் முன்னேற்றத்திற்காக பல வழிகளில் உதவி வருகின்றன. அதுபோன்று ஒரு முன்னுதாரணத்தை தான், நாம் இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பெருஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணா. கெமிக்கல் என்ஜினியரிங் படித்தவிட்டு, பணிநிமித்தமாக லண்டன் நாட்டிற்கு சென்றுள்ளார். பின் நாளில் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட அங்குே குடியுரிமை பெற்று தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தற்போது 37 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவ்வப்போது கிடைக்கும் சிறிய விடுமுறைகளில் தனது  தான் பிறந்த ஊருக்கு வரும் கண்ணா தனது கிராமத்திற்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என எண்ணியுளார். 




இந்நிலையில், பெருஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவ அவசர தேவைகளுக்காக சுமார் 7 கி.மீட்டர் தூரம் கடந்து மங்கைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் உரிய நேரத்தில் முதல் உதவிக்கு கூட வழியின்றி பலர் உயிரிழப்பதை உணர்ந்த கண்ணா, தனது கிராமமான  பெருஞ்சேரி கிராமத்திலேயே மருத்துவமனை அமைத்து அங்குள்ள மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க முடிவெடுத்தார். 




அதற்காக தனது தாத்தா தனசேஷன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்தார். தான் வெளிநாடுவாழ் இந்தியராக இருப்பதால், இந்தியாவில் வசிக்கும் தனசேஷனின் பேத்தி வனிதா ஜெயராமனை அறக்கட்டளை நிர்வாகியாக நியமித்து, தனது பூர்வீக வீட்டை மருத்துவமனையாக உருவாக்கியுள்ளார். இந்த மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து, வெறும் 10 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார். 




இதன் திறப்பு விழாவில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா கலந்துகொண்டு, மருத்துவமனை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். கிராமத்தை விட்டுச் சென்று பல ஆண்டுகள் கடந்த பின்னரும், சொந்த ஊரை மறக்காத கண்ணா குடும்பத்தினரை கிராமமக்கள் அனைவரும் மனமாற நெகிழ்ச்சியுடன் வாழ்த்தி வருகின்றனர்.