தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 875 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் தஞ்சை மாநகரில் 80 விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.


ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா


ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் இந்த விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.


எத்தனை சிலைகளுக்கு அனுமதி


இதையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் 875 விநாயகர் சிலையும், தஞ்சாவூர் மாநகரில் 80 விநாயகர் சிலைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை சொந்தமாக செய்தும், விலை கொடுத்து வாங்கியும் பின்னர் அதற்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அதற்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். மேலும் விநாயகருக்கே உரிய சிறப்பு பிரசாதமான கொழுக்கட்டை மற்றும் சுண்டல் செய்து படையலிட்டும் வழிப்படுவர்.


ஒரு அடி முதல் 16 அடி உயரம் வரை சிலைகள் தயாரிப்பு


கடந்த காலங்களில் வீடுகளில் மட்டுமே விநாயகரை வைத்து வழிப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடமாநிலங்களைப் போன்று இந்த விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்தும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு அடி உயரம் முதல் 16 அடி உயரம் வரையில் பல்வேறு உயரங்களில், பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயாரிக்கப்படுகிறது. இதுபோன்று தயாரிக்கப்படும் சிலைகள் விலை கொடுத்து வாங்கப்பட்டு பின்னர் விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவும், விநாயகர் சதுர்த்தி அன்றும் பக்தர்கள் மூலம் அந்த சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்று பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சிலைகளின் விலை உயர்வாக உள்ளது. காரணம் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று சிலை உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ரூ. ஆயிரம் முதல் 15 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது.


ரசாயனம் கலந்த சிலைகள் பறிமுதல் செய்யப்படும்


அதன்படி தஞ்சாவூர் வெண்ணாட்டங்கரை ஆனந்தவல்லி வடக்கு தெருவில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் ரசாயனம் கலந்த சிலைகளை கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்படும் என்பதுடன் அந்த சிலைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலத்தை முடிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.