தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர்ந்து வரும் முகூர்த்த நாட்களால் தஞ்சாவூர் பூச்சந்தையில் பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2000க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் அதிகளவில் வாங்கி சென்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Continues below advertisement

தஞ்சை விளார் சாலை மற்றும் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. தஞ்சை மார்க்கெட்டுக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல் தஞ்சையில் இருந்து மன்னார்குடி, நீடாமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். இதேபோல மழை காலக்கட்டத்திலும், பனிக்காலத்திலும் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் வரத்து குறைவாக இருக்கும். இதன் காரணமாகவும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். குறிப்பாக மல்லிகைப்பூ, முல்லை, கனகாம்பரம் போன்றவற்றின் விலை உச்சத்தில் இருக்கும்.

Continues below advertisement

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தடுத்த நாட்களில் தொடர் முகூர்த்த நாட்கள் 1வருகிறது. திருமணம், காதணி விழா போன்றவற்றுக்கு பூக்களின் தேவை அதிகம், மேலும் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, பூஜைகளுக்கு பூக்கள் அதிகம் தேவைப்படும்.  இதனால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக, தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகை, முல்லை, கனகாம்பரம் போன்ற பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

தஞ்சை மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதை விட இன்று பூக்களின் விலை 2 மடங்கு அளவுக்கு உயர்ந்து விற்பனையானது. இருப்பினும் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல்  மக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் பூ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விலை உயர்வு காரணமாக தஞ்சை  பூ மார்க்கெட்டில் நேற்று ரூ.500க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.1000-க்கு விற்கப்பட்டது. அதேபோல் ரூ.500 விற்கப்பட்ட முல்லைப்பூ ரூ.1000-க்கும், ரூ.500-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.2000-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட செவ்வந்தி ரூ.500-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட செண்டிப்பூ ரூ.80க்கும், ரூ.100-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.500-க்கும், ரூ.120-க்கு விற்பனையான ஆப்பிள் ரோஸ் ரூ.400க்கும் விற்கப்பட்டது.

இதேபோல் அரளி  ரூ.600க்கும்,  மரிக்கொழுந்து உள்ளிட்ட அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பூக்கள் வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகவும், விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டும் பூக்களின் விலை 2 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. விலை உயர்ந்து இருந்தாலும் மக்கள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர். இதனால் விற்பனையும் நன்றாக இருந்தது. பூக்களின் விலை இன்னும் உயரும். இதேபோல் மாலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்கள் இதை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டடை விட இந்தாண்டு விற்பனை நன்றாக நடந்துள்ளது என்று தெரிவித்தனர்.