மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் 11ஆம் தேதி பெய்த அதீத தொடர் கனமழையின் காரணமாக தமிழகத்திலேயே அதிகப்படியாக 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது‌. அதனைத் தொடர்ந்து நவம்பர் 14 -ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதியான உமையாள்பதி கிராமத்தில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 





பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்1000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 24 -ம் தேதி முதல் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட  1 லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 16 கோடி 16 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் 239 நியாய விலை கடைகளில் வழங்கும் பணி தொடங்கியது. 




மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் மழை நிவாரண உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவித்துள்ளனர். மேலும் நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சீர்காழியை அடுத்த மணிக்கு கிராமம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற மற்ற உறுப்பினருமான நிவேதா முருகன் நிவாரண பணம் 1000 ரூபாய் கால வரையறை இன்றி முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மழை நிவாரணம் பணம் ரூபாய் ஆயிரத்தை டிசம்பர் 15 -ம் தேதிக்கு இதுவரை நிவாரணம் பணம் பெறாதவர்கள் அவர்களுக்கு உரிய நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.




மயிலாடுதுறை அருகே இளந்தோப்பு முதல் சோழியன்கோட்டகம் வரை ரூ.3.11 கோடி மதிப்பீட்டில் 3.900 கி.மீ சாலை அமைக்கும் பணி; மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் இளந்தோப்பு தொடங்கி திருக்குறக்காவல், வடவஞ்சாரம் வழியாக சோழியன்கோட்டகம் வரை சுமார் 3.900 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இவர்களது தொடர் கோரிக்கையையடுத்து இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2021-2022)-இன் கீழ் ரூ‌.3.11கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார். 




மேலும், திருக்குறக்காவல் பழவாற்றில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பச்சுவர் மற்றும் படித்துறையை மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் ராஜகுமார் ரிப்பன் வெட்டி பொதுமக்களில் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் இளையபெருமாள்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.