தஞ்சாவூர் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரோதயம் மகன் இளவரசன் (40). கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வீட்டில் தனது தாய் சசிகலாவுடன் இருந்தார். அப்போது, தஞ்சை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் (2011ம் ஆண்டு) எஸ்.ஐ.,யாக பணியாற்றிய கழனியப்பன் மற்றும் போலீசார் கணேசன், அண்ணாதுரை ஆகிய மூன்று பேரும் இளவரசனின் வீட்டிற்கு சென்று எவ்வித காரணமும் சொல்லாமல், அவரை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, இளவரசனின் உடைகளை கழட்டி உள்ளாடையோடு லத்தியால் இடுப்பிற்கு கீழே கடுமையாக தாக்கியுள்ளனர். தன் மகனை போலீசார் இழுத்து சென்றதால் இளவரசனின் தந்தை சந்திரோதயம், தாய் சசிகலா இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கேட்ட போது, போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து இருவரும் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக, மகனை போலீசார் பிடித்து வந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
உடனடியாக மகனை விட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்துக்கொள்ளுவோம் என உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து போலீசார் அன்று இரவு இளவரசனை விடுவித்தனர். இளவரசனுக்கு நீதி கேட்டு அவரது தந்தை சந்திரோதயம் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இவ்வழக்கில் எஸ்.ஐ., கழனியப்பன் மற்றும் போலீசார் கணேசன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி ஆகிய நாலு பேர் மீதும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் உள்ள மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது.
இவ்வழக்கு விசாரணையின் போது எஸ்.ஐ., கழனியப்பன், கணேசன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி ஆகிய நான்கு பேரும் ஆஜராகாததால் அவர்களுக்கு நீதிபதி மதுசூதனன் பிடிவாரண்டு பிறப்பித்து
உத்தரவிட்டார். கழனியப்பன் என்பவர் தற்போது திருத்துறைப்பூண்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கிய வழக்கில் 4 பேருக்கு சிறை
லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் தஞ்சாவூர் வணிக வரி அலுவலர்கள் 4 பேருக்கு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்த குணசேகரிடம் வணிக வரி அலுவலர்கள் 6 பேர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தங்கள் மீது புகார் வந்துள்ளது என்று கூறி விசாரணை நடத்தினர். மேலும் வரியைக் குறைத்து செலுத்திக் கொள்ளவும் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 12,000 லஞ்சம் அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ. 1.50 லட்சம் வரி போடுவதாகவும் மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து, குணசேகரிடம் லஞ்சம் பெற்ற வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, முத்துக்கிருஷ்ணன், மகாலெட்சுமி, அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சண்முகப்ரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, முத்துக்கிருஷ்ணன், மகாலெட்சுமி, சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 4,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கெனவே காலமாகிவிட்டார்.