தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அம்பேத்கரின் 66-வது நினைவு நாளில் அவரது படத்திற்கு காவி சட்டை அணிவித்து நெற்றியில் பட்டை அடித்து காவி (ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்று அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படம் அச்சிட்ட அச்சக உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் அவரது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அம்பேத்கரை இந்துவாகச் சித்தரிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் காவி உடையில், நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் அம்பேத்கர் படம் இடம் பெற்றுள்ளது. மேலும் காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்று வாசகங்கள் வேறு இருந்தது. அந்த சுவரொட்டியில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், மாநிலச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனால் கும்பகோணம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக அடக்கப்பட்டிருந்த நிலையிலும் தடைகளைத் தகர்த்து உயர்கல்வி பயின்று இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல் அம்பேத்கர். இவரது நினைவு நாளில் இதுபோன்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியினரின் இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும் என போலீசில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர்.
தொடர்ந்து கும்பகோணம் நகரத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த இந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு அதிகரித்ததால் போலீசாரே அந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தியை போலீஸார் கைது செய்து கும்பகோணம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து சுவரொட்டியை அச்சடித்த, கும்பகோணம், உப்புக்காரத்தெருவில் அச்சகம் நடத்தி வரும், அண்ணலக் கிரஹாரத்தை சேர்ந்த சுபாஷ் மகன் மணிகண்டன் (35) என்பவரையும் போலீசார் கைது செய்து அவர் பயன்படுத்திய கணினி மற்றும் மின்னணு பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கும்பகோணத்தில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் விவகாரம்: பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் கைது
என்.நாகராஜன்
Updated at:
08 Dec 2022 04:57 PM (IST)
சர்ச்சைக்குரிய வகையில் அம்பேத்கர் படம் அச்சிட்ட அச்சக உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்
NEXT
PREV
Published at:
08 Dec 2022 04:57 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -