தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
மேகதாது அணை கட்டுமான பணியை தடுக்க வேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். ராசியின் மணல் அணை கட்டுமானத்தை துவங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், போராட்டக் குழு நிர்வாகிகள் பிஅய்யாக்கண்ணு, நாமக்கல் பாலசுப்பிரமணியன், சிவகங்கை எல்.ஆதிமூலம், பயரி எஸ். கிருஷ்ணமணி, சீர்காழி சீனிவாசன், பாலு தீட்சதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டம்
தொடர்ந்து ஊர்வலமாக காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் ஊர்வலமாக சாந்த பிள்ளை கேட் அருகில் உள்ள காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தின், போது விவசாயி ஒருவரை இறந்தவர் போல் துாக்கிக் கொண்டு சென்ற மற்ற விவசாயிகள், முற்றுகைப் போராட்டம் நடந்த இடத்தில் படுக்க வைத்து, அவர் இறந்தது போல் பாவித்து ஒப்பாரி வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் வாக்குறுதி
பின்னர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் மேகதாதுவில் அணை கட்ட இருப்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்து வருகின்றனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எந்த நேரமும் மோடி அரசு அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் ஆணையத்தில் முறையிடவும், அதனை எதிர்ப்பதற்கும் முதல்வர் ஸ்டாலின் அரசு தவறிவிட்டது.
முதல்வர் ஸ்டாலின் மௌனம் காக்கிறார்
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை விவகாரத்தில் வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார். கர்நாடக அரசுக்கு தமிழக அரசு துணை போவதாக தமிழக விவசாயிகள் கருதும் நிலை உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை இதுவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் கோடை வாசலில் ஓய்வெடுக்கலாம். எங்கள் நிலம் கருகுவதைப் பார்த்து நாங்கள் வீதியில் அழுதுக்கொண்டு இருக்கிறோம். இதுவரையில் முதல்வர் ஸ்டாலின் வாய் திறந்து ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை இவ்வாறு அவர் கூறினார்.