தஞ்சாவூர்: உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் தொடங்கப்பட்ட நாளையொட்டி, தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் பகவான் ராமகிருஷ்ணர் ரதம் புறப்பாடு நடந்தது.
மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி
கடவுளே மனித உருவில் வந்து, வாழ்வாங்கு வாழும் வழிதனை தம் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் பாரதப் பண்பாட்டின் நெடுகிலும் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்து அனுபவித்து, உணர்ந்து மதம் கூறும் நல்வழிகளை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வந்தவர் அவர். கடவுள் வழிபாட்டின் அத்தனை பாவனைகளும் மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி என்று அனுபவித்து உணர்ந்தவர் ராமகிருஷ்ணர்.
பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் வடிவம்
தன் மனைவி சாரதாதேவியை அன்னை பராசக்தியின் வடிவமாக வழிபட்டு, பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் வடிவம் என்கிற பாரதப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர். நன்மையிலும் தீமையிலும் அன்பிலும் பயங்கரத்திலும் சந்தோஷத்திலும் துக்கத்திலும் அழகிலும் அழகின்மையிலும் உயர்விலும் தாழ்விலும் ஒன்றொன்றுக்கு மாறுபட்ட அனைத்திலும் இறைவனைக் காணும் தாந்த்ரீக சாதனைகளை பைரவி பிராமணி அம்மையார் மூலம் அவர் கண்டறிந்தார். அதன் மூலம் அனைத்திலும் இறைவனைக் காணும் மனநிலையைப் பெற்றார்.
இழிந்ததையும் தெய்விகத்தையும் வேறுபடுத்தாமல் பார்த்தார். சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்களுடைய கழிவறையைக் கழுவிச் சுத்தப்படுத்தியிருக்கிறார். பிச்சைக்காரர்கள் உண்ட உணவில் எஞ்சியிருந்ததைச் சாப்பிட்டிருக்கிறார்.
ராமகிருஷ்ண மிஷன் தொடக்கம்
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் தனது குருவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொல்கத்தா பேலூரில் ராமகிருஷ்ண மிஷனை 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்கினார். இப்போது உலகம் முழுவதும் ராமகிருஷ்ண மிஷன், ராமகிருஷ்ண மடம் ஆன்மீக மற்றும் சேவை பணிகளை செய்து வருகிறது. இதைப் போற்றும் வகையில் மே 1 ஆம் தேதியான தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ரத திருவிழா நடைபெற்றது.
திருமூவர் படம் அலங்கரிக்கப்பட்ட ரதம் புறப்பாடு
தஞ்சாவூர் சிவாஜி நகர் ராமகிருஷ்ண மடத்தில் திருமூவர் படத்துக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, ராமகிருஷ்ணர் தியான நிலையிலான திருவுருவச் சிலை அமைத்து, பின்புறம் திருமூவர் படம் அலங்கரித்து வைக்கப்பட்ட ரதம் புறப்பட்டது. இதில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சிங்கப்பூர் ஸ்ரீமத் சுவாமி ஜிதமானசந்தா மகராஜ், புதுச்சேரி ஸ்ரீமத் சுவாமி நரவரானந்த மகராஜ், திருவண்ணாமலை ஸ்ரீமத் சுவாமி மாத்ரு சேவானந்த மகராஜ் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஜமீன்தார் நடராஜ் காளிங்கராயர், வழக்குரைஞர் கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து ரத புறப்பாட்டை தொடங்கி வைத்தனர்.
இன்று ரதயாத்திரை நிறைவு
இந்த ரதம் சிவாஜி நகர், ஆப்ரகாம் பண்டிதர் நகர் தெருக்கள், மகா மாரியம்மன் கோயில் பகுதி வழியாகச் சென்றது. தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (மே 2) பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சிவராயர் தோட்டம் தெருக்கள், கிருஷ்ணன் கோயில் தெரு, விஜய மண்டபம் தெரு வழியாக வலம் வந்து கலைவாணி மன்றத்தில் ரத யாத்திரை நிறைவடைகிறது.
பக்த மண்டலியை சேர்ந்தவர்களின் பக்திப்பாடல்கள்
விழாவில் பக்த மண்டலியைச் சேர்ந்த பெண்கள் பக்தி பாடல்களை இசையுடன் பாடி வந்தனர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வரலாற்றுச் சிறப்புக்கள் அவரது அமுத மொழிகள் வாசிக்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பக்தர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி அலங்கரித்து ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருமூவர் படத்துக்கு தீபாராதனை செய்து புஷ்பார்ச்சனையுடன் வழிபட்டனர். இதில் ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.