தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவையாறு புறவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் விவசாயிகள் தங்களது உண்ணாவிரத தொடர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.




தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30ம் தேதி விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனால் விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இதையடுத்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புறவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது ‌. இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவு எட்டப்படாததால் தோல்வி அடைந்தது.





இந்த நிலையில் மீண்டும் விவசாயிகள் தங்களது உண்ணாவிரத தொடர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். தஞ்சை அடுத்த காட்டுகோட்டை பாதை பகுதியில் தொடங்கிய போராட்டம் 2-வது நாளாகவும் நீடித்தது. புறவழிச்சாலையை கைவிட வேண்டும். மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும். புறவழிச்சாலை திட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் தங்கள் கோரிக்கையாக வலியுறுத்தினர்.


 





அகமதாபாத் விரைவு ரயில் பாபநாசத்தில் நிற்கும்!

அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண்: 09419/09420 வரும் ஜனவரி மாதம் 29-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ெரயில் வரும் 25ம் தேதி மற்றும் ஜன.1.ம் தேதி, 8ம் தேதி, 15ம் தேதி, 22ம் தேதி, 29ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை 7.25-க்கு வந்து சேரும்.

பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வரும் 23ம் தேதி, 30ம் தேதி மற்றும் ஜன. 6ம் தேதி, 13ம் தேதி, 20ம் தேதி, 27ம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-க்கு பாபநாசம் வந்து சேரும்.

இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா), புனே, கல்யாண், (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம். சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும். இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.