மருமகளுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் வீட்டை விட்டு வெளியேறிய மாமியார் தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கன்னித்தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை கன்னித்தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் பெண் பிணம் தொங்குவதாக பொதுமக்கள் தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை கன்னிதோப்பை சேர்ந்த பழனிவேல் மனைவி அஞ்சம்மாள் (68) என்று தெரியவந்தது. மேலும் அவர் தனது இரண்டாவது மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு மருமகள் வெண்ணிலாவுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வீட்டை விட்டு சென்றுள்ளார். இ.பி. காலனியின் உள்ள மகள் வீட்டு அஞ்சம்மாள் சென்றிருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்து இருந்தனர்.

ஆனால் மனமுடைந்த அஞ்சம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






ஏர்ஹாரன்கள் பறிமுதல்

தஞ்சையில் அதிக ஓசை எழுப்பும் வகையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் அகற்றினர்.

தஞ்சை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் பல்வேறு பேருந்துகளில் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் வந்தது.

இதையடுத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் தஞ்சை நகரில் வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது சட்ட விரோதமாக பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை (காற்று ஒலிப்பான்) அகற்றினர். மேலும் தொடர்ந்து ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.




ஆடு திருடர்கள் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் காட்டியிருக்கும் ஆடுகளை ஒரு கும்பல் நோட்டமிட்டு கடந்த சில நாட்களாக திருடி வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பைக்கில் ஆடுகளை கொண்டு சென்ற இரண்டு பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதில் அவர்கள் பட்டுக்கோட்டை அடுத்த ஆலத்தூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுந்தரராஜுக்கு சொந்தமான தென்னந்தோப்பிலிருந்து ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அருள்செல்வன் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பழனிவேலு (27), ரகுபதி மகன் சுரேஷ் (28) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.