தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சாகுபடி வயல்கள் வழியாக புறவழிச்சாலை அமைப்பதைக் கைவிட கோரி கண்டியூரில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு இந்த விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
திருவையாறில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணக்கரம்பை, கண்டியூர், கீழத்திருப்பூந்துருத்தி, கல்யாணபுரம் 1 ஆம் சேத்தி, பெரும்புலியூர், திருவையாறு மேற்கு வழியாக புறவழிச்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் அழித்து புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து ஏற்கெனவே விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினர். வயலில் இறங்கி கருப்பு கொடி காட்டினர். சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கண்டியூர் அருகே காட்டுப்பாதைக்கு எதிரே உள்ள சத்திரத்தில் நாள்தோறும் 2 முதல் 5 பேர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். இப்போராட்டத்தை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
இப்போராட்டத்தில் தமிழ்ச்செல்வன், ராஜவேல், சுந்தரமூர்த்தி, சந்திரசேகரன், கமலக்கண்ணன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் விமல்நாதன் கூறியதாவது:
திருவையாறைச் சுற்றி அமைக்கப்படுகிற புறவழிச்சாலையால் 6 கிராமங்களில் இருக்கும் மிக வளமான 3 போகம் சாகுபடி செய்கிற விளைநிலங்களுக்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியைச் சார்ந்த விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதிகளில் உணவு உற்பத்திக்கு தடை ஏற்படும்.
மேலும், மழைகாலத்தில் பெய்யும் மழை நீர் வடிவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுவதால், இதர நிலங்களுக்கும் மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. இதனால், எதிர்காலத்தில் மிகப் பெரிய இயற்கை இடர்பாடு ஏற்படும் என்பது உறுதியாகிறது.
இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு பதிலாக திருவையாறிலுள்ள நெடுஞ்சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதுமானது. இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கான முறையான முன்னறிவிப்பும், மத்திய அரசின் கையகப்படுத்துதல் இல்லாமல் விவசாயிகளை அச்சுறுத்தி அராஜக முறையில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இத்திட்டத்தை அரசு கைவிட்டு, மாற்றுத் திட்டமாக திருவையாறு - தஞ்சாவூர் நெடுஞ்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.