திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த  நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த 17.02.2021 ஆம் தேதி டாட்டா கிளிக் என்கிற ஆன்லைன் நிறுவனம் மூலமாக 39,999 ரூபாய் மதிப்புள்ள லெனோவா லேப்டாப் ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து கடந்த 24.02.21 அன்று லேப்டாப் டெலிவரி செய்யப்பட்ட அன்றே லேப்டாப் டிஸ்ப்ளே வேலை செய்யாத காரணத்தினால் இது குறித்து ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.


ஆன்லைன் நிறுவனம் லெனோவா நிறுவனத்திடம் இருந்து ஜாப் சீட் அல்லது எம்.டி.ஓ.ஏ. சான்றிதழ் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் இது குறித்து லெனோவா நிறுவனத்திற்கு போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து லெனோவா நிறுவனத்தின் பொறியாளர் வீட்டிற்கு வந்து தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்து அந்த மடிக்கணினியை பிரிக்க முடியாத அளவிற்கு பேக் செய்து ஒரு வாரத்திற்குள் எம்டிஓஏ சான்றிதழ் வந்துவிடும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். 




இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் பலமுறை ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் மற்றும் லெனோவா நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்காத காரணத்தினால் இது குறித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்யலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் தாங்கள் பொறுப்பு இல்லை லெனோவா நிறுவனம் மட்டுமே பொறுப்பு என்பதை இந்த ஆணையம் ஏற்க மறுக்கிறது.


இந்த விவகாரத்தில் இருவருமே பொறுப்பானவர்கள் என்று இந்த ஆணையம் கருதுகிறது. புகார்தாரருக்கு சரிவர சேவை செய்யாததால் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை செய்துள்ளதாக இந்த ஆணையம் கருதுகிறது. எனவே பழுதடைந்த மடிக்கணினிக்கு பதிலாக புதிய மடிக்கணியை வழங்க வேண்டும். 




மேலும் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகவும், மேலும் இந்த நிறுவனத்தில் இதுபோன்று பல பேர் பொருட்கள் வாங்கி பாதிப்படைத்து இருப்பார்கள் என்பதால் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதி கணக்கிற்கு இரண்டு லட்ச ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், மேலும் வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 


இந்த தொகையினை மும்பையை சேர்ந்த டாடா கிளிக் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் திருச்சியை சேர்ந்த லெனோவா சர்வீஸ் சென்டர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த லெனோவா இந்தியா தனியார் நிறுவனம் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தோ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 40,000 மதிப்புள்ள லெனோவா நிறுவனத்தின் லேப்டாப் வாங்கின அன்றே பழுதடைந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் நிறுவனம் அலட்சியப்படுத்தி வந்த நிலையில் நிறுவனத்திற்கு தக்க பாடம் புகட்டும் வகையில் நுகர்வோர் குறைவீரானையும் வழங்கிய தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பதாக பாதிக்கப்பட்ட நபரும் அவர்களுடைய உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.