தஞ்சாவூரை அடுத்த காசாநாடுகோவிலுாரில் தமிழக அரசின் நேரடி நெல் கொள் முதல் நிலைய கட்டடம் உள்ளது. இங்குள்ள கொள்முதல் நிலையத்திற்கு நடுவூர், தெக்கூர், கோவிலுார், புதுார், நெல்லுப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்த நெல் கதிர்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விவசாயிகள், விற்பனை  செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமங்களில் மின்மோட்டார் தண்ணீரை கொண்டு கடந்த ஜூன் மாதம் நடவு செய்தனர். தற்போது அனைத்து பயிர்களும் கதிர்கள் முற்றியுள்ளது.




மேலும், கதிர்கள் முற்றி, சாயும் நிலை ஏற்பட்டுள்ளதால், தொடர் மழைக்கு பயந்து விவசாயிகள் முதல் கட்டமாக சுமார் 25 ஏக்கர் சாகுபடிசெய்துள்ள நெற்கதிர்களை அறுவடைசெய்தனர். பின்னர் அந்த நெல் மூட்டைகளை, காசாநாடு கோவிலூர் கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில், விற்பனைக்காக கொண்டு வந்தனர். வருடந்தோறும், இதே போன்ற அறுவடை தொடங்கியதும், வேளாண்மைத்துறை அலுவலர்கள், தகவல் அளித்ததின் பேரில், கொள் முதல் நிலையம் திறக்கப்படும். ஆனால் அறுவடை செய்து, சுமார் 10 நாட்களுக்கு மேலாகியும் இது நாள் வரை திறக்க வில்லை. இது குறித்து நுகர்பொருள்வாணிபக்கழக அதிகாரிகளிடம், கொள் முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை மனுவை விவசாயிகள் அளித்தனர்.




அதிகாரியும் 6 ஆம் தேதி திறக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். ஆனால் சாக்குகள், உலர் மற்றும் எடை போடும் இயந்திரங்கள் மட்டும் இறங்கியுள்ளன. ஆனால் கொள் முதல் நிலையம் திறக்கவில்லை. தற்போது பகலில் வெயில் அடித்தாலும், இரவு நேரங்களில் பலத்த மழையும், அதிகாலையில் பனியும் பொழிவதால்,, கொள் முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகளில் நாற்றுக்கள் முளைத்துள்ளது. இதனால் கொட்டி வைத்துள்ள அனைத்து நெல்மணிகளும் வீணாகி நாசமாகி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக காசாநாடு கோவிலுார் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்கா விட்டால், போராட்டம் செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.




இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி முருகேசன் கூறுகையில், காசாநாடு கோவிலுார் கிராமத்தை சுற்றிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மேல் மின் மோட்டார் தண்ணீரை பயன்படுத்தி,குறுவை சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஜூன் மாதம் நடவு செய்து, தற்போது அனைத்து பயிரும் அறுவடைக்காக காத்திருக்கின்றனர். இதில் சுமார் 20 ஏக்கர் அளவிலுள்ள நெற்பயிர்களில் கதிர்கள் முற்றியதால், வயல்களிலேயே சாய்ந்து வந்தது. இதனால் மீண்டும் அதில் நாற்றுக்கள் முளைத்து விடும் என்பதால், வேறு வழியில்லாமல் அறுவடைசெய்தோம்.






அறுவடை செய்த நெல் மூட்டைகளை, நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றோம். ஆனால்  கொள் முதல் நிலையம் திறக்க வில்லை.உடனடியாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தோம்.அவரும் 6ஆம் தேதி முதல் கொள் முதல் நிலையம் இயங்கும் என்றார். ஆனால் இன்று வரை இயங்கவில்லை. இந்நிலையில், அறுவடைசெய்த நெல் மூட்டைகள், கொள் முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருப்பதால்,  இரவு நேரத்தில் பெய்யும் மழையினால், நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்துவிட்டன.இதனால் நெல் மணிகள் அனைத்தும் பதறாகி, விற்பனை செய்ய முடியாமல் போய்விடும். இதே போல் கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக விவசாய கூலி ஆட்களை நியமித்துள்ளதால், அவர்களுக்கு சம்பளம், உணவு போன்றவைகள் வழங்குவதால், சாகுபடிக்கு செய்த செலவு பணமாவது கிடைக்கமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


விவசாயிகள், தனியாரிடம் கடன் வாங்கியும்,நகைகளை அடமானம் வைத்தும், ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்த நெற்பயிரை,  விற்பனை செய்ய முடியாத வகையில், அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதால், அப்பகுதியில் அறுவடைக்காக காத்திருக்கும் 5 ஆயிரம் ஏக்கரின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக காசாநாடுகோவிலுார் கிராமத்தில் உடனடியாக  நேரடி நெல் கொள் முதல்  திற்ககாவிட்டால், அறுவடை செய்த நெல் மூட்டைகளை எடுத்து வந்து சாலையில் கொட்டி நுாதன போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.