திருவாரூரில் கன மழையால் 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. விவசாயிகள் கவலை.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை திறக்கப்படாத காரணத்தினால் குறுவை சாகுபடி செய்யாத நிலையில் ஒருபோக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு இலக்கு நினைத்திருந்தது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு விவசாயிகள் சாதனை படைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மேட்டூர் அணை தண்ணீரை நம்பி 70 சதவீத விவசாய பணிகளும், மேலும் ஆழ்துளை கிணறுகளை நம்பி 30 சதவிகித விவசாய பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெல் பயிர்களை அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாயத் தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி, ராதாநல்லூர், வடகரை, கருக்கங்குடி, கல்யாண மகாதேவி, கீழமணலி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் மழை தொடர்ந்து பெய்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் முற்றிலும் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும். ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை நேரத்தில் மழை பெய்து நெல் பயிர்களை முற்றிலும் பாதிப்படையச் செய்துள்ளது எங்களை மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த ஆண்டு நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு இல்லாத காரணத்தினால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால் அடுத்து செய்யக்கூடிய சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் பொருளாதார நஷ்டம் காரணமாக பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.