தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அதிகாரிகள், முன்னாடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் உரக்கடைகளிலும் டிஏபி உரம் இருப்பு இல்லை. யூரியா வேண்டுமென்றால்  பொட்டாஷ், நுண்ணூட்டஉயிர் உரங்கள் வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படுகிறது. யூரியாவும் மூட்டைக்கு 100 கூடுதலாக வைத்து விற்கப்படுகிறது. மாவட்டத்தில் செயற்கையான தட்டுப்பாட்டை தனியார் வியாபாரிகள் ஏற்படுத்துகின்றனர். எனவே அதிகாரிகள் கள ஆய்வை ரகசியமாக நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Continues below advertisement

குறுவை நெல் அறுவடை தற்போது தீவிரமாக இருப்பதால், கொள்முதலை மாவட்டம் முழுவதும் விரைவுப்படுத்திட வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் முறையாக கடனை திருப்பி செலுத்திய, பயிர் கடன் கேட்ட விவசாயிகளுக்கும் இதுவரை கடன் வழங்கவில்லை. கடந்தாண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். மழைக்காலம் தொடங்க இருப்பதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

Continues below advertisement

பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்த நவம்பர் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் நகை கடன், பயிர் கடன் வழங்கியது தொடர்பாக ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து பலரும் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி தற்போது 1.84 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையான அளவு விதை நெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது குறுவை  அறுவடை தீவிரமாக உள்ளதால் மாவட்டத்தில் 318 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 1,52,553 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 30,117 விவசாயிகளுக்கு 310 கோடி வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 132 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டதில், 22 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மீதமுள்ள மனுக்கள் தொடர்புடைய துறைக்கு அனுப்பப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகளின் குறைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

அப்போது, தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, விவசாயிகள் கொடுத்த புகார் மீது பொய் வழக்கு பதிந்து சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் தஞ்சை மாவட்ட கலெக்டரின் சர்வாதிகார  போக்கினை கண்டித்தும்,  உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்,  திருச்சி-தோகூரை இணைக்கும் புதிய பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த நிலையில்,

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கல்லணையில் பழைய பாலத்திலேயே வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால், கல்லணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது எனவே பழைய பாலத்தில் போக்குவரத்தை தடை செய்திடவேண்டும். டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் மூட்டை ஈரப்பதம் இருப்பதால் சாலையில் வயல்களில் நெல்மணிகள் உலர்த்துகின்றனர். எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களை போர்க்கால அடிப்படையில் உலர் இயந்திரத்தை வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, விவசாய குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து, வாயில் கருப்பு துணி கட்டி,  மாவட்ட கலெக்டரை கண்டித்து, கண்டன கோஷங்களிட்டனர்.