தஞ்சாவூர்: தஞ்சாவூரை மாவட்டம் பூதலூர் பகுதியில் சம்பா சாகுபடி பணிக்காக இயந்திரம் மூலம் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.
தாமதமாக திறக்கப்பட்ட மேட்டூர் அணை
தஞ்சாவூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் சம்பா நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு வழக்கமான ஜூன் 12ம் தேதி திறக்கப்படவில்லை. மாறாக 45 நாள் தாமதமாக ஜூலை 28ம் தேதி திறக்கப்பட்டது.
சம்பா சாகுபடிக்கு உரிய பருவம் வந்ததால் விதை விட்டனர்
கல்லணையில் இருந்து ஜூலை 31ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை சென்றடைந்தது. தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. சம்பா சாகுபடிக்கு உரிய பருவம் வந்ததும் விவசாயிகள் விதை விட்டனர். பூதலூர் வேளாண்மை வட்டார பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு வந்தது.
சம்பா சாகுபடியை பொறுத்தவரையில் விவசாயிகள் நீண்ட 180 நாட்கள் நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பதும், வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதன் பின்னர் பாய்நாற்றங்கால் தயாரித்தனர். தற்போது நாற்றங்கால் வளர்ந்து நடுவுக்கு தயாராகி விட்டதால் சம்பா நாற்று நடும் பணிகள் பெரும்பாலான இடங்களில் நடந்து வருகின்றன.
இயந்திரம் மூலம் நடவு மேற்கொள்ளும் விவசாயிகள்
பெரும்பாலான விவசாயிகள் ஐ ஆர் 20 ரக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.1009 மற்றும் ஆந்திர பொன்னி ரக நெல் சாகுபடியும் செய்ய விவசாயிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் பாசன பகுதிகளில் சம்பா நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் ஆட்களுடன், வெளிமாநில ஆட்களும் நடவு பணிகள் செய்து வருகின்றனர். சில விவசாயிகள் இயந்திரம் கொண்டு நடவு பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். செப்டம்பர் கடைசி வாரத்தில் நடவு செய்த விவசாயிகள் களை எடுத்து மேல் உரம் இடும் பணிகளை செய்து வருகின்றனர். பூதலூர் வேளாண்மை பகுதியில் இம்மாத இறுதியில் சம்பா நடவு பணிகள் இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பம்ப் செட் மூலம் சாகுபடிகள் தொடங்கப்பட்டன
இது குறித்து விவசாயி திருமாறன் கூறுகையில், மேட்டூரில் வழக்கம் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பம்பு செட் மூலம் விவசாயிகள் சாகுபடியை தொடங்கிவிட்டோம். 1009 என்ற ரகத்தை சாகுபடிக்கு தயார் செய்துள்ளோம். இயந்திரத்திற்கான வாடகை உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.2,500-க்கு இருந்த வாடகை இந்த ஆண்டு டீசல் விலை உயர்வால் ரூ.300-வரை உயர்ந்துவிட்டது.
சொந்தமாக இயந்திரம் வைத்திருப்பவர்கள் ஆட்கள் கூலி மட்டும் கொடுக்கின்றனர். ஆனால் வாடகைக்கு எடுப்பவர்கள் ஆட்கள் கூலி, வாடகை என கடந்த ஆண்டைகாட்டிலும் இந்த ஆண்டு செலவு கூடிவிட்டது. சொந்தமாக பாய் நாற்றங்கள் தயாரித்து நடுகிறோம் எங்களுக்கு நடுவு முடிந்த பின்னர் வரும் மீதி நாற்றங்காலை விற்பனை செய்து விடுவோம். பம்பு செட் மூலம் சாகுபடி தொடங்கி மழையை நம்பி நடவு பணியை தொடங்கி விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.