மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது நாள்தோறும் அறுவடை செய்து அந்த பருத்தியை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான பருத்தி கொள்முதல் நிலையம் ஆண்டு தோறும் பருத்தி அறுவடை காலத்தில் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிராமத்தில் கொள்முதலை தொடங்கி வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு கடைசி அறுவடை முடியும் வரை இங்கு தொடர்ந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பருத்தியை மயிலாடுதுறை, கும்பகோணம், சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் முன்னிலையில் டெண்டர் முறையில் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பருத்தியை விற்பனை செய்வதற்காக பருத்தி விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் நேற்று எருக்கூர் பருத்தி கொள்முதல் நிலையத்தில் வாகனங்களில் பருத்தி மூட்டைகளுடன் வந்து குவிந்தனர். வியாபாரிகள் டெண்டர் முறைப்படி பருத்தியின் தரம் பார்த்து விலை நிர்ணயம் செய்தனர். இதில் அதிகபட்ச விலைக்கு பருத்தி ஒரு குவிண்டால் 7015 ரூபாயும் அதே நேரத்தில் ஒரு குவின்டால் மிகக் குறைந்த விலையான 3300 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
இதனால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு பருத்தி விற்பனை விலை நிர்ணயம் செய்யப்படாமல், பல விவசாயிகளின் பருத்தி பஞ்சு இரண்டு மற்றும் மூன்றாம் தரமாக கணக்கிடப்பட்டு விலை மதிப்பீடு குறைக்கப்பட்டது. இதனால் மிகக் குறைந்த விலைக்கு பருத்திப் பஞ்சு கொள்முதல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்ய வந்த பருத்தி வியாபாரிகள் பாதி பேர் எடுத்து வந்த பருத்தியை மீண்டும் வீட்டிற்கு சிரமத்துடன் எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பருத்தி வியாபாரிகள் கூறுகையில் எருக்கூர் பருத்தி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதன் மூலம் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை. கிராமங்களிலிருந்து வரும் பருத்தி மிகமிக குறைந்த விலைக்கு மதிப்பீடு செய்யப்படுவதால் கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்கு எடுத்து வந்த பருத்தி மூட்டைகளை விவசாயிகள் பலர் மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று தனியாரிடம் விற்பனை செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசு பருத்தி விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பருத்தி விவசாயத்தையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.