தஞ்சை அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக்கடைகள், செல்போன் பழுது பார்க்கும் கடைகள், டீக்கடைகள், செருப்பு கடைகள் என 54 கடைகள் உள்ளன.  இக்கடைகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. மழைநீர் வடிகால் மீது இந்த கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கடைகள் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கடைகளை காலி செய்ய மாநகராட்சி வலியுறுத்தியது. இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கடைகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின் இயந்திரத்தோடு அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் இடிக்கப்படவில்லை. அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் தொடர்ந்து கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


தொடர்ந்து, தற்போது கடைகள் இருக்கும் இடத்திற்கு பின்பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளை இடிக்க ஏதுவாக மின் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி கடிதமும் மின் வாரியத்துக்கு எழுதி உள்ளது. இதனை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை இடிக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜகுமார் தலைமையில் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். கடை வியாபாரிகள் மற்றும் திமுகவினர் அந்த பகுதியில் சாலை ஓரம், காலை 10 மணி முதல் மாலைவரை அவர்கள் அங்கேயே திரண்டும், அமர்ந்திருந்தனர்.




இது குறித்து திமுகவினர் கூறுகையில், இந்த கடைகளால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது கடைகளை இடிக்க வேண்டாம். இதனை நம்பி 500 குடும்பங்கள் உள்ளன. இங்கு கடைகள் இருந்தால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். ஆனால் மாற்று இடம் கூட வழங்காமல் கடைகளை இடிக்க மாநகராட்சி முயல்கிறது.  மேலும், திமுக ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆணையர் செயல்படுகின்றார்கள். திமுக எம்எல்ஏ சார்பில், கொடுக்க செல்லும் நிர்வாகிகளை உள்ளே அனுமதிப்பதில்லை. தற்போதுள்ள ஆணையர் யாருக்கோ சகாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றார். இது குறித்து முதல்வரிடம் புகார் அளிக்கவுள்ளோம். உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்க போகும் நிலையில், திமுக மீது ஆட்சி மீது பழிச்சொல் ஏற்படுத்த வேண்டும் என்று இது போன்ற பணியில் ஈடுபடுகின்றார்.  எனவே எங்களுக்கு இந்த பகுதிலேயே கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும், வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், எங்களின் வாழ்வாதாரத்தையும் காக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.


இந்நிலையில் மாலை 4 மணிக்கு இந்த கடைகளுக்கு செல்லும் மின்இணைப்புகளை துண்டிப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதையடுத்து போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து மின் இணைப்புகளை துண்டிப்பதற்காக மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு செருப்பு கடையில் வேலை பார்க்கும் தஞ்சை கரந்தையை சேர்ந்த ரமேஷ் (51) தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின்னர் வியாபாரிகள், திமுகவினர் காப்பாற்றினர்.




இதையடுத்து அங்கு இருந்த அவரை போலீசார் மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர்  ரமேஷை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி தஞ்சை நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினரும் கலைந்து சென்றனர். முன்னதாக வியாபாரிகள் அந்த பகுதியில் உள்ள கடைகளை அடைத்து இருந்தனர்.