கும்பகோணத்திற்கு மீண்டும் பணி மாற்றலாகி வந்த வட்டார போக்குவரத்து அலுவலருக்கு,  அவரது அலுவலகத்திற்குள்,  சென்று அம்மன் மாலை அணிந்து, அலங்காரம் செய்து,  மலர் துாவி அபிஷேகம் செய்த கோவில் அர்ச்சகர்கள்‌ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி வகிப்பவர் முக்கண்ணன். இவர் ஏற்கனவே கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி வகித்தார். பின்னர் முக்கண்ணன் மேல் பிரச்சனைகள் ஏற்பட்டதால்,  கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலராக மாற்றலாகிச் சென்றார். இவர் கும்பகோணத்தில் பணியாற்றிய போது அனைவரையும் சிறப்பாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுவரை தொடர்ந்து கும்பகோணம்  வட்டார போக்குவரத்து அலுவலர்களாக அருணாசலமும் அதனை தொடர்ந்து ஜெய்சங்கரும் பணியாற்றினார். இந்நிலையில் முக்கண்ணன் மீண்டும் கும்பகோணத்திற்கு மாற்றல் கேட்டு முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் பதவியை பெற இவர் கடும் முயற்சி செய்ததுள்ளார்.




இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணியாற்றிய ஜெய்சங்கர் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து யாரும், எதிர்பாராத வகையில்,  முக்கண்ணணை தமிழக அரசின் போக்குவரத்து துறை கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக மீண்டும் நியமனம் செய்தது. அதன்படி கடந்த மாதம் 24ஆம் தேதி முக்கண்ணன் கும்பகோணத்தில் பணியில் சேர்ந்தார். அவர் கும்பகோணத்திற்கு மாற்றலாகி வந்ததை அறிந்த அவரது ஆதரவாளர்கள் முக்கண்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.


இந்நிலையில்  கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ளதால் அங்கு புகழ்பெற்ற பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் ரமேஷ் தலைமையில் மூன்றுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்களும் ஊழியர்களும் கடந்த வாரம் கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முக்கண்ணனை சந்தித்து துர்க்கை அம்மனுக்கு சாற்றப்பட்ட பல்வேறு மலர் மாலைகளை எடுத்து சென்று முக்கண்ணனுக்கு, துர்கையம்மன் போல், மாலைகளை அணிவித்து,  அலங்காரம் செய்து, பரிவட்டம் கட்டி கழுத்தளவு மாலைகளை அணிவித்து அம்மனுக்கு அர்ச்சனை செய்வது போல் மந்திரங்கள் முழங்கியபடி அவருக்கு மலர் அபிஷேகம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.




இதனை பார்த்த சமூகவலைதள பார்வையாளர்கள் கும்பகோணம் கோவில் நகரமாக விளங்கி  வரும் சூழலில் இங்கு கடவுளுக்கு பிறகுதான் மற்றவை என நம்பப்பட்டு வரும் நிலையில், அரசு ஊழியரான வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு துர்கையம்மனுக்கு,  நிகராக மலர் அபிஷேகம் செய்த அர்ச்சகர்கள் மீது கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், துர்கையம்மன், எதிர்களை வீழ்த்தவும், அழிக்கும் தெய்வமாகும். எந்த விதமான பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பாள் துர்கையம்மன். முக்கண்ணன், மீண்டும் கும்பகோணத்திற்கு வந்துள்ளதால், அவர் மேல் எந்த விதமான எதிரிகள், இடையூர்கள் இருக்க கூடாது என்பதற்காக நடத்தப்பட்டதாக தெரிகிறது. துர்கையம்மன் போல் அலங்கரித்து, அம்மனுக்கு சாற்றிய மாலை, பூக்களை கொண்டு மலர் அபிஷேகம் செய்துள்ளது, பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.