தமிழக அரசு கொரோனா தொற்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவிட்டிருந்தது. பின்னர் தொற்று நாளுக்கு நாள் குறைய தொடங்கியதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஆனால் பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்கள்,உணவு விடுதிகள், துணி கடைகள், மார்கெட், டாஸ்மாக் கடைகளை பல்வேறு கட்டுபாடுகளுடன் திறக்க தமிழக அரசு திறக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்திலுள்ள கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களை திறக்க கூடாது, வழக்கம் போல் நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெற வேண்டும், பக்தர்களை அனுமதிக்ககூடாதுஎன உத்தரவிட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்ற குறைந்து வரும் நிலையில்,பல்வேறு தளர்வுகளுக்கு உத்தரவிட்டிருந்தாலும், கோயில்களை, பக்தர்கள் வரும் பிரதான நாட்களான வெள்ளி, சனி ஞாயிற்று கிழமைகளில் மூடி வைத்திருப்பது வேதனையான செயலாகும்.
இதனால் பக்தர்கள், வெளியில் நின்றும் சாமி தரிசனம் செய்வது, தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களையும் திறக்க வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசு கோயில்களை திறக்காததால், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை முருகன் கோயில் முன்பு முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர், கோயிலை வெள்ளி, சனி,ஞாயிற்று கிழமைகளிலும் திறக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முருக பக்தர்களான மருத்துவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார், மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தனர். சத்தியநாராயணன் வரவேற்றார். லோகநாதன் நன்றி கூறினார். இதில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி பொது செயலாளர் குரமூர்த்தி மற்றும் ஏராளமான முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். இது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றிலும் நவக்கிரஹ கோயில்கள், புராதன கோயில்கள், வரலாற்று சிறப்பு வாய்ந்தவைகள் உள்ளன. இதனால் வார நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வெளி நாடு, மாவட்ட, மாநில, உள்ளூரை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். மேலும், நவக்கிரஹ கோயில்கள் இருப்பதால், தங்களது தோஷ நிவர்த்திக்கும், திருமணம், குழந்தை பேறு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்காக வருவார்கள்.
இதே போல், சோழர்காலத்து சுவடுகள் இருப்பதால், தாராசுரம்,சோழன்மாளிகை, திருப்புறம்பியம் உள்ளிட்ட கும்பகோணத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளுக்க வரலாற்று ஆசிரியர்களும், மாணவர்களும் குறிப்பெடுத்துகொள்வதற்காக வருவார்கள். இத்தகைய சிறப்புபெற்ற கோயில்கள் உள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் திறக்காததால், அரசு டாஸ்மாக் கடைகள், பேருந்துகள், திரையரங்கம், பொழுதுபோக்கு பூங்காக்கள் இயங்குகின்றன. இங்கு வரும் மக்கள் பல மணி நேரம் அமர்ந்து பொழுதை போக்குகின்றனர். மதுபான கடைகள், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பேருந்து நிலையத்தில், வணிக வளாகங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் பரபரப்பாக இயங்குகின்றனர். எங்குமே சமூக இடைவெளிகள் காணப்படவில்லை. அதேபோல் திருமண நிகழ்வுகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் அரங்கம் நிரம்பி வழியும் அளவிற்கு கூட்டம் உள்ளது. இவையாவும் பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோயில்களை திறப்பதால் மட்டும் கொரோனா பரவல் வரும் என்று தமிழக அரசின் முடிவு ஏற்புடையது அல்ல. ஒருதலை பட்சமானது தினந்தோறும், பல இலட்சம் பக்தர்கள் கூடும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்வ தரிசனம் அனைத்து நாட்களிலும் அனுமதிக்கப்படுகிறது.
அப்படி இருக்கும் போது நன்னெறியுடன், பக்தி சிரத்தையுடன் ,அமைதியாக ஒருவர் பின் ஒருவராக வரிசையில் முறைப்படி சென்றுதான் பக்தர்கள் ஒவ்வொரு கோவிலிலும் வழிபடுகின்றனர்.. இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி கொரோனா தொற்று பரவும் என அரசு விளக்க வேண்டும். கட்டுப்பாடின்றி கூடும் டாஸ்மாக்கில் பேருந்தில் ,திருமண நிகழ்வுகளில், அரசியல் நிகழ்சிகளில் கொரோனா பரவாது. ஆனால் கட்டுப்பாட்டுடன் விதிமுறைகளை பின்பற்றி ஒழுங்குபட்டு வழிபடும் திருக்கோவில்களில் மட்டும் கொரோனா பரவும் ஆகையால் வழிபாட்டிற்கு தடை என்பது விசித்திரமாக உள்ளது.
மேலும் இது போன்ற அரசின் பாரபட்ச நடவடிக்கையால் திருக்கோவில் வழிபாடுகளை நம்பி உள்ள மலர்வணிகம், பூஜை பொருட்கள், ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனங்கள், தங்கும் விடுதி மற்றும் உணவகங்கள், துணியகம், பாத்திரம், உலோக சிற்பங்கள், மளிகை மண்பாண்ட தொழில் என்று ஜம்பது விதமான தொழில் மற்றும் வணிகம் பாதிக்கப்பட்டு பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில்களை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சுழற்சி மற்றும் வளர்ச்சியில் பெரும்பகுதி திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் அடங்கி உள்ளன. இப்படிப்பட்ட ஒரு மிக முக்கிய பிரச்சினையை அரசு மிக சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு பெரும்பான்மை மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படுதல் நியாயமல்ல , நடுநிலையும் இல்லை எனபதை சுட்டிக்காட்டி வார இறுதி நாட்களில் திருக்கோயில்களை திறக்க அனுமதிக்க வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் முகமாகவும், தகப்பனுக்க உபதேசம் செய்த தலமான சுவாமிமலையில் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தது, முருகன், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு, கோயில்களை திறக்க முருகன் உபதேசம் செய்வார் என்ற நம்பிக்கையில், சுவாமிமலை கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம் என்றார்.