மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்ட 23-வது மாநாடு நடைபெற்றது.

  முன்னதாக ராமநாதன் மருத்துவமனை அருகில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு, கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் பி.செந்தில்குமார் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், பூதலூர் ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் மாநாட்டை வழிநடத்தினர்.




கூட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு, வரும் ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிப்பது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் கூலியை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி 300 ரூபாய் ஆகவும், பணியை 150 நாட்களாக வேலையை உயர்த்தியும் வழங்க வேண்டும்.




தஞ்சாவூரில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட  வேண்டும். கைத்தறி பட்டுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 12 விழுக்காடாக உயர்த்துவதற்கான அறிவிப்பை  திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி வரியில் இருந்து கதருக்கு விலக்கு அளித்ததை போல, பட்டு கைத்தறி, நெசவுத் தொழிலுக்கும் வரிவிலக்கு அளித்திட வேண்டும். நெசவாளர்களை வரிகளை குறைத்து அந்த தொழிலை காப்பாற்ற வேண்டும்.கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி, பூதலூர் தாலுகா திருச்சினம்பூண்டி, பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு ஆகிய இடங்களில் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி திறக்கப்பட வேண்டும்.  இதனால் நுாற்றுக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும்.லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் மணல் எடுக்க அமைக்கப்படவுள்ள, லாரிக்கான மணல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.   




கட்டுமான, முறைசாராத் தொழிலாளர்களின் பணப் பயன்கள், ஓய்வூதியம் 3,000 அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடுமை, சாதிய வன்கொடுமைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கொரோனா காலத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உதவி புரியும் வகையில் தன்னார்வலர்களாக செயல்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.