தஞ்சை மேலவீதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த புரட்சித் தலைவி  அம்மா ஆலயம்  என்ற கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். இவரது உடல் மெரீனா  கடற்கரையில் எம்.ஜி.ஆர்., நினைவகம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த இடத்தை ஒரு கோயிலாக பாவித்து தினமும் அதிமுகவினர் ஜெயலலிதாவை வணங்கி வருகின்றனர்.




இந்நிலையில், இதன் உச்சகட்டமாக தஞ்சையில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியுள்ளார். தஞ்சை மேலரத வீதியைச் சேர்ந்த சுவாமிநாதன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் சிலை வைத்துள்ளார்.தற்போது அந்த சிலை அருகே 130 சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதாவுக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என பெயரிட்டு, 'மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகத்தை பொறித்துள்ளார். தற்போது இந்த கோவிலில் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக  பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் தேரோடும் வீதிகள் ஆன மேல வீதி, தெற்கு வீதி, வடக்குவீதி, கீழராஜவீதி மற்றும் தெற்கு அலங்கம் ஆகிய வீதிகளில் சாலை சீரமைக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி ஆகிய மூன்று வீதி சாலைகளை அகலப்படுத்தி, மழை நீர் செல்லும் வகையில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவுள்ளது.




இந்த மூன்று வீதி சாலைகளில் 1.9 மீட்டர் அகலம் முதல் 2.5 மீட்டர் வரை நடைபாதை அமையவுள்ளது.  நான்கு தெருக்களிலும் தேர் ஓட்டப்படும் போது தெருக்களின் தன்மை மற்றும் கோவில் திருவிழாக்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சாலைஅமைக்கப்படுகிறது. வடக்கு பிரதான வீதி நடைபாதைகள், சாலை ஓர வடிகால்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான பிரத்யேக இடத்துடன் தரமான 3 வழிச்சாலை வண்டிப்பாதை கட்டமைப்பாக மேம்படுத்தப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட கூடுதல் நிலம் பார்க்கிங் இடமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நடைபாதையிலும் வழக்கமான குறுக்குவெட்டுகளில் நடைபாதை வடிகால் மற்றும் பயன்பாடுகளும் உள்ளன. அனைத்து சாலைகளில்,  அடையாளம், விவரக்குறிப்புகள்,  அலுமினிய தட்டுக்கு மேல் பொருத்தப்பட்ட நவீன ரிப்லெக்டிவ் ஷீட் உடனும்,  இரும்பு, குழாய்களில், அடையாளங்கள், அறிகுறிகள் வைக்கப்படவுள்ளது.


இந்த அடையாளங்களில், சாலை மையம், விளிம்பு கோடு, தொடர்ச்சி கோடு,  நிறுத்த கோடு,  வழி கோடுகள், மூலைவிட்ட-செவ்வகரான் அடையாளங்கள் மற்றும் வரிக்குதிரை போல் வௌ்ளை கோடுகள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. சாலை குறியீடுகள் மிகவும் பொருத்தப்பட்ட அதி நவீன தெர்மோபிளாஸ்டிக் வண்ணப்பூச்சுகளுடன் கண்ணாடி விவரங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி வைக்கப்படுகிறது. இரவு நேரம் மற்றும் ஈரமான வானிலையில் பார்வைத்திறனை மேம்படுத்த பிரதிபலிப்பு ஸ்டட்கள் வழங்கப்பட வேண்டும். இவை  நவீன ரெட்ரோ ரிப்ளெக்டிவ் வகையில் அமைக்கப்படுகிறது.




மின்தேக்கிகள் மற்றும் தானியங்கி சென்சார்   மற்றும் வெளிச்சத்தை மேம்படுத்துதல் மற்றும் அதே நேரத்தில் குறைந்தபட்ச மின்சக்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் திறமையான மற்றும் நவீன விளக்கு சாதனங்கள் வைக்கப்படுகிறது. பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொருத்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சரியான வழியில் தோட்டங்கள் வைக்கப்படுகிறது.இதற்காக தஞ்சை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மேல வீதி, கொங்கனேஸ்வரர் கோவில் அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என்ற பெயரில்  கோவில் கட்டப்பட்டிருந்தது. இந்த கோவில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி  பொக்லைன் எந்திரம் மூலம் இந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது.