தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம்  தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அணைகளில் நீர் திறக்கப்பட்டு பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 




மேலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நெற்பயிர்கள் பெருமளவு மழை நீரில் மூழ்கி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒன்றாக டெல்டா கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் சூழலில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


திருவாரூரில் தொடர் கனமழை - 4ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மறையூர், சிறுகோவங்குடி, முட்டம், ஊர்குடி, சேத்தூர், கொள்ளிடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்ட சுமார் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள்  நீரில் மூழ்கி உள்ளது. இதில் 25 சதவீத பயிர்களுக்கு மேல் காப்பாற்ற முடியாத, அழுகிய நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் அழுகி வருவதாகவும், தண்ணீர் வடிய வடிகால்கள் சரியான தூர்வார வில்லை  எனவே வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





இன்று காலை 6 மணி நிலவரப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேட்டில் 26 மில்லி மீட்டரும், சீர்காழியில் 31 மில்லி மீட்டரும், கொள்ளிடம் பகுதியில் 32 மில்லி மீட்டர் தரங்கம்பாடியில் 23.40 மில்லி மீட்டர்  மழையளவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகப்பட்ச மழையாக கொள்ளிடத்தில் 32 மில்லிமீட்டர் மழையும், குறைந்தபட்சமாக 23.40 மில்லி மீட்டர் மழை தரங்கம்பாடியிலும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மழை விட்டால் மட்டுமே மழை நீரை வடிய வைக்க முடியும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.