தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் டெங்கு காய்ச்சல் போன்ற மழைக்கால நோய்கள் அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ சேவை துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 முறை கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். 




இந்நிலையில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று சென்னை வந்தது. இந்த குழு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டெங்கு நோயாளிகளிடம் இன்று ஆய்வு நடத்துகிறது. டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் மத்திய சுகாதார குழு ஆய்வு நடத்த, மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மண்டல இயக்குனர் டாக்டர் ரோஷிணி தலைமையில், டாக்டர் நிர்மல் ஜோ, டாக்டர் ஜான்சன் அமலா ஜஸ்வின் ஆகிய 3 பேர் கொண்ட மத்திய குழு நேற்று சென்னை வந்தது. இந்த குழுவினர் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தனர். 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் தொடர்பாக அதிக நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருமளவு குறைந்துள்ள சூழலில் தற்போது காய்ச்சல் என அதிக நபர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 




டெங்கு காய்ச்சல் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு தெரிவித்து டெங்கு குறித்த உண்மை நிலையை வழங்க ஏபிபி செய்தி நிறுவனம் மயிலாடுதுறை மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரதாப் குமாரிடம் கேட்டபோது டெங்கு காய்ச்சல் குறித்த விவரம் தங்களிடம் இல்லை என்றும், அதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் லியாக்கத்அலி கேட்டு கொள்ள வேண்டுமென தெரிவித்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி தொடர்புகொண்டு கேட்டபோது நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு அதற்கென தனி சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது இது குறித்த தகவலை அவர்கள் தான் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.




டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்த விவரம் தங்களிடம் இல்லை என பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் கூறுவது மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார துறை தவறிவிட்டதாக ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது.