தஞ்சாவூர்: 500 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் தஞ்சையில் சிதிலமடைந்து வருகிறது. கட்டிடம் பூட்டிக்கிடப்பதோடு, மரங்களும் முளைத்து காணப்படுகிறது. இதனைக் கண்டு சமூக அலுவலர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். 


தானியங்களை சேகரிக்கும் நெற்களஞ்சியங்கள்


• நம் முன்னோர்கள் தங்களின் உணவு உற்பத்திக்காக வேளாண்மைக்கு மாறிய போது தங்களுக்கு தேவையான தானியங்களை பானைகள், குழிகளில் சேமிக்க தொடங்கினர். காலங்கள் மாற மாற அதுவே அதிக அளவு தானியங்களை சேமிக்க பெரிய அளவிலான அமைப்புகளாக மாறின. அந்த வகையில் காவிரியை ஒட்டிய பகுதிகளில் பல்வேறு கோயில்களில் நெல் தானியங்களைச் சேமிப்பதற்காகவே நெற்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன.


திருச்சியில் மூன்று பாபநாசத்தில் ஒன்று


• திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் 3 நெற்களஞ்சியங்கள் உள்ளன. தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோயிலில் அச்சுதப்ப நாயக்கர், அவரது மகன் ரகுநாத நாயக்கரின் காலத்தில் இருந்த ராஜகுரு கோவிந்த தீட்சிதரால் பெரிய அளவிலான நெற்களஞ்சியம் கட்டப்பட்டுள்ளது. இது, 3 ஆயிரம் கலன் நெல் சேமிக்கும் அளவு உடையது.




தஞ்சையில் உள்ள நெற்களஞ்சியம்


• இதேபோல, தஞ்சை மேலவீதியில் உள்ள கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் நெற்களஞ்சியம் உள்ளது. செவ்வக வடிவில் உள்ள இந்த நெற்களஞ்சியத்தை முகப்பில் இருந்து பார்க்கும்போது மூன்று அடுக்கு கொண்ட கட்டிடக்கலை அமைப்பில் காணப்படுகிறது.


தானியங்களை கொட்டும் அமைப்பு


• முதல் அடுக்காக உள்ள முகப்பு மண்டபம் போன்ற அமைப்பு. தூண்கள் தாங்கிய தாழ்வார அமைப்பாக இருந்து பின்னாளில் தூண்களும் இடைப்பட்ட பகுதியும் அடைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அடுக்கு என்பது வெளிப்புற அடுக்காக உள்ளது. இதன் வெளி ஓரத்தில் நன்கு மூடி திறக்கும் ஜன்னல் வடிவ நான்கு துளைகள் உள்ளன. இதிலிருந்தே தானியங்களைக் கொட்டுவதற்கான அமைப்பு இருந்துள்ளது. 
• இதற்கு சமமாக பின்பகுதியில் தானியங்களைக் கொட்டுவதற்கான அமைப்பு உள்ளது. இந்த இடத்தை அடைய படிக்கட்டுகள் உள்ளன. ஆனால், படிக்கட்டுகளை அடைய தற்போது எந்த அமைப்பும் இல்லை.


90 ஆயிரம் கிலோ வரை தானியங்கள் சேமிக்கும் அமைப்பு


• உள்பக்கம் 21.45 மீட்டர் நீளம் மற்றும் 10.6 மீட்டர் அகலத்துடன் செவ்வக வடிவ அறை உள்ளது. இந்த இடமே தானியங்கள் கொட்டப்படும் இடமாக உள்ளது. இதில், 90 ஆயிரம் கிலோ வரை தானியங்களைச் சேமிக்கலாம். இதன் மையத்தில் வடக்கு, தெற்காக 4 முழு சதுர வடிவ தூண்களும், இரண்டு சுவர் ஒட்டிய தூண்களும் சுமார் 30 அடி உயரம் கொண்டதாக தாங்கி நிற்கிறது. இந்தக் கூரையின் வெளிப்புறத்தில் 7 கலசங்கள் இருந்த அடையாளமும் தெரிகிறது. 


மதுரை நாயக்கர் மஹால் கட்டிடக்கலை


• வெளிப்புற அமைப்பைப் பார்க்கும் போது மதுரை நாயக்கர் மகால் கட்டிடக்கலை அமைப்போடு ஒத்துள்ளது. ஒட்டுமொத்த கட்டிடக்கலையும் செங்கல் சுண்ணாம்பு கலந்த கட்டுமான அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு சில இடங்களில் வெளிப்பகுதியில் செம்புறாங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. எனவே, இது நாயக்கர் கால கட்டிடக்கலையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி மைதானம் மன்னர்கள் காலத்தில் குளமாக இருந்திருக்க வேண்டும். குளக்கரையில் இந்த நெற்களஞ்சியம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.


• இந்தக் கட்டுமானத்தைப் பார்க்கும்போது அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். இக்கட்டடக்கலையில் செங்கற்கட்டுமானம், வளைவுகள் போன்றவை நாயக்கர் காலத்தைச் சார்ந்ததாக உள்ளது. மன்னர்கள் காலத்தில் மேல வீதியில் அமைச்சர்கள், அரண்மனையில் பணியாற்றிய உயர் அலுவலர்கள் வசித்து வந்தனர். எனவே, மழை, வெள்ளக் காலம், போர்க்காலத்தில் தங்களுடைய உணவுத்தேவைக்குத் தானியங்களைச் சேமிப்பதற்காக இந்த நெற்களஞ்சியத்தை பயன்படுத்தி இருக்கலாம்.


நீண்ட காலத்துக்கு தானியங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்


• நீண்டகாலத்துக்கு பயன்படும் விதமாக உணவு தானியங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் விதமாக இதன் அமைப்பு உள்ளது. அக்காலத்தில் களிமேடு பகுதியிலிருந்து நெல் தானியம் விளைவிக்கப்பட்டு, இங்கு கொண்டு வந்து சேமித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நெற்களஞ்சியம் தஞ்சை மாவட்ட நிர்வாகம், சுற்றுலா வளர்ச்சிக்குழுமத்தின் முயற்சியால் வரலாற்று ஆர்வலர்களைக் கவர்ந்துள்ளது.


• இதன் மூலம், சில ஆண்டுகளாக பாரம்பரிய நடைப்பயணத்தில் இந்த நெற்களஞ்சியமும் ஓரிடமாக பார்வையிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நெற்களஞ்சியம் சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. கட்டிடத்தில் ஆங்காங்கே செடி, கொடிகள், மரங்கள் முளைத்து காணப்படுகின்றன. மேலும் ஆங்காங்கே கட்டிடமும் சிதிலமடைந்து வருகிறது.


500 ஆண்டுகள் பழமையானது


• இந்த கட்டிடம் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதால் இது கட்டப்பட்டு 500 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த கட்டிடம் பூட்டியே கிடப்பதால் நாளுக்கு நாள் அதன் பொலிவை இழந்து வருகிறது. இந்த நெற்களஞ்சியத்தை சுற்றிலும் இரும்பு கம்பிகள் நடப்பட்டு இரும்புக்கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்பகுதியில் ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் பலகையும் இடம் பெற்றுள்ளது.


• ஒரு வரலாற்று சின்னமாக திகழும் இந்த நெற்களஞ்சியம் பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் சிதையக்கூடிய நிலையம் உள்ளதால் இதனை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். மேலும் இதனை முறையாக பராமரித்து சுற்றுலா வருபவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்தால் வருங்கால தலைமுறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.