தஞ்சை பழைய பஸ் நிலையம்  அண்ணா சிலை அருகில்,  மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சனசபா உள்ளது. இந்த சபா குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் முன்பகுதியில் கடைகளில், ஒரு உணவகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகம் செயல்பட்டு  வந்தது. மேலும், இந்த வளாகத்தில் மதுபான பார், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உணவகம் மற்றும் மதுபான பார், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவை நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் கடந்த 13.8.2021 அன்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது.




இதனை தொடர்ந்து, கடைகளின் உரிமையாளர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கட்டிடம் தொடர்பாக அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உணவகத்திற்கு அனுமதி பெற்றதற்கான விவரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 22.9.2021 அன்று பூட்டி சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து மதுபானகூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றுக்கு கால அவகாசம் உள்ளதால் அந்த கடைகளில் மாநகராட்சி சார்பில் கடந்த 22ஆம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், சுதர்சன சபா வளாகத்திலுள்ள  பேக்கரி, மதுபான கூடம், செல்போன் கடை ஆகிய மூன்று கட்டிடத்திற்கு 13.8.2021 அன்று நகர் ஊரமைப்பு சட்டம் 1971 ன்படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மேற்படி கட்டிடத்தை உரிய அறிவிப்பின் கீழ் உரிய அனுமதி பெற்ற விவரம் சமர்ப்பிக்காததால் அல்லது திருத்தி அமைக்காததால் இந்த கட்டிடம் நகர் ஊரமைப்பு சட்டத்தின்படி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.  




அதன்படி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று  சுதர்சன சபா வளாகத்தில் அமைந்துள்ள பேக்கரி, மதுபான கூடம், செல்போன் கடை ஆகிய மூன்று கடைகளுக்கு காலை 10 மணிக்கு பூட்டி  சீல் வைத்தனர். பின்னர் அக்கடைகளில் பூட்டி முத்திரையிடுதல் உத்தரவை ஒட்டினர். அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவகையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாநகர குடியிருப்போர் சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் மாநகர முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில்,  ’’உண்மை  உழைப்ப  உயர்வு என வாசகத்துடன், தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியமின்றி வாடிய பணியாளர்களுக்கு பதவி ஏற்ற சில நாட்களில் மாநகராட்சி வருவாயை பெருக்கி பணியாளர்களுக்க குறித்த நாளில் ஊதியம் வழங்கிட்ட ஆணையாளரே….. மாநகரின் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்தி செயல்படுத்தி வரும் மாநகராட்சியின் ஆணையரே … நேர்மையின் சிகரமே நின் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்’’ அச்சடித்து ஒட்டியுள்ளனர்.