தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதல் வாடகை கேட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவது போகமான சம்பா மற்றும் ஒரு போகமான தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சம்பா-தாளடிக்கு 13.5 லட்சம் ஏக்கர் வேளாண்மைத்துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். தற்போது 90 சதவீத நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது. சம்பா, தாளடி நடவுப்பணி அதிக அளவில் நடைபெற்றுள்ளதால், அறுவடை இயந்திரங்களை வைத்திருப்பவர்கள், கூடுதலாக வாடகையை வசூலிப்பார்கள், விவசாயிகளும் அறுவடை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் வேறு வழியில்லாமல் கூடுதலாக வாடகையை கொடுத்து அறுவடை செய்வார்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாவார்கள்.
இதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையினை முறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 2350 ரூபாய், டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 1700 ரூபாய் என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடம் இருந்து வசூல் செய்து அறுவடை இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட வாடகையினை விட கூடுதலாக விவசாயிகளிடம் இருந்து வாடகை வசூல் செய்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், தஞ்சாவூர், செயற்பொறியாளர் (வே.பொ) எண். 90035 23343, தஞ்சாவூர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 90805 52519, கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 94436 78621, பட்டுக்கோட்டை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ) எண். 99761 93110 மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எண். 94420 93161, தஞ்சாவூர், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 94875 96121, கும்பகோணம், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08368, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08335 என்ற எண்களில் புகார் தெரிவித்திட கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும், தங்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக மேற்காணும் அலுவலர்களுக்கோ அல்லது தஞ்சை விவசாயி குறைதீர்ப்பு என்ற வாட்ஸ்ஆப் குரூப் மூலமாகவோ பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகள் தங்களுடைய புகார் மனுக்களை நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அளித்திடலாம். விவசாயிகளின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.