கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இன்று முழு ஊரடங்கு. கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் இல்லாமல் களையிழந்து காணப்படும் காணும் பொங்கல்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று பரவல் இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றளவும் குறையவில்லை. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, அதன்பின்னர் உருமாறிய கொரோனா டெல்டா வேரியண்ட் தற்போது ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளின்படி ஊரடங்கு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு கடந்த மூன்று மாத காலமாக பல்வேறு மாநிலங்களில் இயல்புநிலை திரும்ப தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் மூன்றாவது அலை வீச தொடங்கிவிட்டதாக இந்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் அலை மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக இயல்புநிலைக்குத் திரும்பிய தமிழகம் மீண்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு வாரநாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவித்தது.
அதேபோல வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பால் விற்பனையகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஏடிஎம் மையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பயன்பாடுடைய நிலையங்களை தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்திலும் இன்று முழு ஊரடங்கு முழுவதுமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் தினமான இன்று முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு காணும் பொங்கல் களை இழந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் காவல் துறை சார்பில் முக்கிய பகுதிகளில் 115 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வரும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.