தஞ்சாவூர்: அரசு விரைவு போக்குவரத்துக் கழக தஞ்சை பணிமனையில், உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

தஞ்சை பணிமனை சிஐடியு தலைவர் டி.பரத்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் பணிச்சுமை, பணி நியமனம் மற்றும் அலுவலக மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை அலுவலக மாற்றுப் பணிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும், அவர்கள் எந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்களோ அந்தப் பணியை மட்டுமே மேற்கொள்ளும் வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Continues below advertisement

மேலும், போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் ஓட்டுநர் ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு உரிய பணியாளர்களை முறையாக நியமிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதன்மூலம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களது வழக்கமான பணிகளில் முழுமையாக ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தொழிலாளர்களுக்கு பணிகளை முறையாகப் பகிர்ந்தளிக்கும் வகையில் சுழல் முறை பணி முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பணி நியமனம் மற்றும் பணிப்பகிர்வில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக தொழிலாளர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய சங்க துணைத் தலைவர் பி.வெங்கடேசன், நாகை மண்டல துணைத் தலைவர் க.அய்யப்பன், கும்பகோணம் மண்டல துணைப் பொதுச்செயலாளர் முருகானந்தம், துணைத் தலைவர் ராமசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சா.செங்குட்டுவன், மாவட்ட துணைத் தலைவர் த.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இதில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை தஞ்சை கிளை மேலாளர் முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, போக்குவரத்துக் கழக நிர்வாகம் தொழிலாளர்களின் பணிநிலை தொடர்பான பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பணிமனைச் செயலாளர் ஏ.எஸ்.பழனிவேல் நன்றி கூறினார்.