தஞ்சாவூர்: திருவையாறு அருகே விவசாயத் தோட்டத்தில் மீன் குட்டை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, பூமிக்கடியில் இருந்து 2 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

திருவையாறு அருகே சிறுபுலியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். விவசாயியான இவர், தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் மீன் குட்டை அமைக்க முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் மாலை பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு குட்டையைச் சுற்றிலும் கரை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Continues below advertisement

பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது, திடீரென பூமிக்கடியில் இருந்து கற்கள் போன்ற பொருட்கள் தென்பட்டன. இதனைப் பார்த்த பொக்லைன் இயந்திரத்தை இயக்கியவர் உடனடியாக பணியை நிறுத்தினார். இதையடுத்து அய்யப்பன் மற்றும் அங்கு இருந்தவர்கள், அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதை அறியும் வகையில் கைகளாலும், கடப்பாரை உள்ளிட்ட கருவிகளாலும் கவனமாக மண்ணை அகற்றினர்.

அப்போது மண்ணுக்குள் 2 கற்சிலைகள் புதைந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுற்றிலும் இருந்த மண்ணை அகற்றியபோது, சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட பெருமாள் சிலையும், ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்பாள் சிலையும் இருப்பது தெரியவந்தது. இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

பூமிக்கடியில் இருந்து சிலைகள் கிடைத்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் சிலைகளை மிகவும் பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்தனர். அவற்றின் மீது இருந்த மண் மற்றும் அழுக்குகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சிலைகளுக்கு வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து உடனடியாக வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 கற்சிலைகளையும் உரிய பாதுகாப்புடன் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, நேற்று கண்டெடுக்கப்பட்ட பெருமாள் மற்றும் அம்பாள் கற்சிலைகள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த சிலைகள் எந்த காலத்தைச் சேர்ந்தவை, அவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன, அவை எவ்வாறு அந்த இடத்தில் புதைந்தன என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்ட பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீன் குட்டை அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது எதிர்பாராதவிதமாக 2 கற்சிலைகள் கிடைத்த சம்பவம் சிறுபுலியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதி மக்களிடையே வரலாற்று ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.