தஞ்சாவூரில் டிச.29 aaம தேதி பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோரின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் முதல்வர் வருகைக்கான பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,




தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சாவூருக்கு வருகிறார். திமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோரது சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் மறுநாள் 30 ஆம் தேதி காலை 9 மணிலயளவில் 8 மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகளும் வழங்க ஒருங்கிணைப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.




தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்பில் மக்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் எந்த மனுக்களுக்கு தீர்வு காணமுடியுமோ அதற்கு தீர்வு காணும் வகையில் உரிய உத்தரவுகளையும், அந்த விழாவில் முதல்வர் வழங்குவார். முதல்வர் வரும் போது எத்தனை மனுக்களுக்கு வழங்க முடியுமோ அதன் படி நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வரும் பாதைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும் அன்று பயனாளிகளை பாதுகாப்பாக அழைத்த வந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  மருத்துவ வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் ஏற்படுத்தப்படுகிறது.




தேர்தலுக்கு முன்பாகவே மக்களை தேடி வந்து மனுக்களை பெற்ற நிலையில், தற்போது  முதல்வராக மக்களை தேடி வந்து நலதிட்டங்களை வழங்க வருவது தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல்வரின் வருகையை மிகுந்த ஆர்வத்துடன் தஞ்சாவூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய மாநாடு போல் நடைபெறவுள்ளது. இங்கு அமைப்படும் பந்தல் வித்தியாசமாக போடப்படுவதால், இப்போதே பொது மக்கள் பந்தலை கண்காட்சி போல் பார்வையிட்டு வருகின்றார்கள். முதல்வரின் உத்தரவின்படி பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுள்ளது மிகப்பெரிய சக்சஸ் ஆகியுள்ளது. என்றார். ஆய்வின் போது  அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள்  துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.