ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்து தஞ்சாவூரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர்  மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிமாக இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் தடுக்கும் விதமாக தனிப்படை ஒன்றை அமைத்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்க உத்திரவிட்டார். அதன்படி  இந்த தனிப்படையின் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமை காவலர் உமாசங்கர், காவலர்கள் அருண்மொழி, அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர்.




இதையடுத்து இந்த தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தஞ்சாவூர் கரம்பையில் ஒரு வீட்டில் திடீரென சோதனை நடத்திய போது அங்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்தும், அங்கிருந்த திருச்சி காந்தி மார்கெட் கவுதம் (24), தஞ்சாவூர் பார்வதி நகர் பூமிநாதன் (58), பட்டுக்கோட்டை பாரதி நகர் குமார் (38), ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ரஞ்சனாஞ்சன்(33) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், தஞ்சையில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரி்த்து வந்தது. கஞ்சா வியாபாரிகள் வேலைக்கு செல்லும் சிறுவர்கள் அதிக பணம் கொடுத்து, பையில் கஞ்சாவை வைத்து, காய்கறிகளை கொண்டு வருவது போல் சென்று கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர் என்ற தகவல் வந்தது. இது தொடர்பாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட பகுதியில் உள்ள பழமையான மண்டபத்தில் கஞ்சா விற்பனை நடந்து வருவது தெரிந்தது. இப்பகுதியில் வந்து செல்பவர்களை, அவர்களை கண்காணித்த போலீசார்,  தஞ்சையிலிருந்து, விற்பனை செய்வது தெரிய வந்தது.




இதனையடுத்து அப்பகுதியை ரகசியமாக கண்காணித்த போலீசார், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் மதுரைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சாவை கடத்தி வந்து, அங்கிருந்து தஞ்சை கொடி மரத்துமூலை பகுதியில் பல ஆண்டகளாக கஞ்சா விற்பனை செய்து வந்த  பூமிநாதனுக்கு சொந்தமான  கரம்பையில் உள்ள மற்றொரு வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தனர்.  பின்னர் அவர்கள், சில்லரை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டு சிறுவர்கள் மூலம் அனுப்பி வருவது தெரிய வந்தது.   இவர்கள், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சையை அடுத்த வடக்குவாசல், பள்ளியக்கிரஹாரம், கீழவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கெனவே கஞ்சா விற்பனை தொடர்பாக பல வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றோம்  என்றனர்.