தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்க மத்திய அரசு நிதி தர மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே உடன் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் உள்ளது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி மதிப்பில் உலகத் தரம் வாய்ந்த மின்னொளி வசதியுடன் கூடிய செயற்கை இழை தடகள ஓடு பாதை அமைக்க 2017 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.3.50 கோடியை மத்திய நிதி ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, தடகள ஓடுபாதையில் ரூ.1.90 கோடி மதிப்பில் தலா 80 அடி உயரத்தில் 4 மூலைகளிலும் உயர் பன்முக விளக்குகள் அமைக்கப்பட்டன. மேலும், உலகத் தரம் வாய்ந்த செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி தொடங்கி, ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்றும், அதன் பின்னர் இந்த விளையாட்டரங்கத்தில் சர்வதேச, தேசிய தடகளப் போட்டிகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.
இதற்காக ஏற்கெனவே இருந்த தடகள ஓடு பாதையை சுமார் 4 அடி உயரத்துக்கு உயர்த்தி அமைக்கப்பட்டு, தார் சாலையும் போடப்பட்டது. இப்பணி முடிவடைந்து சில ஆண்டுகள் ஆன போதும், இன்னும் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.
ஆனால், இத்திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு நிறைவேற்றுவதற்கு நிதி இல்லாததால், 6 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. இந்நிலையில், மக்களவையில் தஞ்சாவூர் எம்.பி., ச. முரசொலி, இத்திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட நிதி விவரங்கள், நிதி வழங்குவதிலும், திட்டத்தை முடிப்பதிலும் ஏற்பட்ட தாமதத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அண்மையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த பிப்ரவரி 10ம் தேதி அளித்த பதிலில், இத்திட்டத்துக்கு 2017 - 18ம் நிதியாண்டில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 2017, ஜூலை மாதத்தில் முதல் தவணையாக ரூ. 3.50 கோடி நிதி தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த அமைச்சகத்தின் பின்தொடர்தல்கள் இருந்தபோதிலும், இத்திட்டம் 6 ஆண்டுகளாக தாமதமாக மேற்கொள்ளப்படுவதால், 2024, மார்ச் மாதம் முடிக்கப்பட்டுவிட்டது.
எனவே, இத்திட்டத்தைத் தமிழக அரசு தனது சொந்த நிதியின் மூலம் செய்து முடித்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் தொடங்கப்பட்டபோது ரூ. 7 கோடிக்கு மதிப்பிடப்பட்டாலும், தற்போதைய நிலையில் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ. 10 கோடி தேவை என மதிப்பிடப்படுகிறது. இப்பணியை முடிப்பதற்கு மேலும் ரூ. 5.50 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் தெரிவித்தனர்.
என்றாலும், இப்பணி தாமதமாக நடைபெறுவதால், தேசிய அளவிலான போட்டிக்குத் தயாராகும் தஞ்சாவூரைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் சென்னைக்கும், திருச்சிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், வீரர்களுக்கு அலைச்சலும், பொருட்செலவும் ஏற்படுகிறது. எனவே, இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே மத்திய அரசு இதற்காக காலதாமதத்தை கணக்கில் கொள்ளாமல் நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான வீர்ர்கள் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாக உள்ளது. அப்படிப்பட்ட வீர்ர்கள் பயிற்சி பெற இந்த காலதாமதத்தை பொருட்படுத்தாமல் உடன் நிதியை அளிக்க வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து தஞ்சாவூர் எம்.பி., ச. முரசொலி கூறுகையில், இடைப்பட்ட காலத்தில் கொரோனா பரவல் பேரிடர், தொடர் கனமழை உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, மீதமுள்ள ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கீட்டை தருமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அடுத்த முறை மக்களவைக்குச் செல்லும்போதும் அவரைச் சந்தித்து வலியுறுத்தவுள்ளேன். எப்படியும் இந்த நிதி ஒதுக்கீட்டை வாங்கி, அத்திட்டத்தை முடிக்க முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.