தஞ்சாவூர்: வேதனைக்கு மேல் வேதனையாக இந்தாண்டும் தொடர்ந்து 3ம் ஆண்டாக சம்பாவில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பொருளாதார நிலையை வெகுவாக பாதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக நடப்பாண்டும் சம்பா சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டாவது பயிர் காப்பீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் 3.23 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. இதில், இதுவரை 2.75 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணி நிறைவடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.. மாவட்டத்தில் கடைமடைப் பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஏறத்தாழ 30 சதவீதப் பரப்பளவில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் உள்ளன.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது இயல்பான அளவை தாண்டியும், பருவம் தவறியும் மழை பெய்தது. இதனால் முன் பட்ட சம்பா பயிர்கள் பெருமளவில் மழையால் பாதிக்கப்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. ஏக்கருக்கு 35 மூட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில் 15 முதல் 25 மூட்டைகள்தான் மகசூல் கிடைத்தது. இது விவசாயிகள் சாகுபடிக்காக வாங்கிய கடனை கொடுக்கவே சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன் பட்டத்தைப் போன்று, பின்னால் தொடங்கப்பட்ட சாகுபடியிலும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பரப்பளவில் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் திட்டமிடப்பட்ட 92 இடங்களில் இதுவரை 72 இடங்களில் பயிர் அறுவடை சோதனை முடிவடைந்துள்ளது. இதன் மூலம் சராசரியாக ஏக்கருக்கு 1,900 கிலோ மட்டுமே மகசூல் கிடைப்பது தெரிய வந்துள்ளது.
ஏக்கருக்கு 2,400 கிலோ கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், சராசரி அளவில் ஏக்கருக்கு 500 முதல் 800 கிலோ வரை மகசூல் குறைவதால், விவசாயிகள் நரு;டத்தைச் சந்தித்து வருகின்றனர். இது குறித்து பூதலுர் அக்ரஹாரத்தை சேர்ந்த விவசாயி வி.சுதாகர் கூறியதாவது:
ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் சாகுபடிக்காக செலவு செய்யப்பட்ட நிலையில், மகசூல் இழப்பால் ரூ. 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கதிர் விடும் தருணத்தில் மழை பெய்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஒரு செடியில் 220 நெல்மணிகள் வர வேண்டிய நிலையில், 100 நெல் மணிகள் பதராகிவிட்டன. இதுவே, மகசூல் இழப்பும், நஷ்டம் ஏற்பட்டதற்கும் காரணம். நான்கு மாத கால உழைப்பில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், செய்த செலவுக்குக் கூட வருவாய் கிடைக்காததால், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயி அளந்து பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள். ஆனால் இப்போது அளந்து பார்க்க உழக்கு கூட இல்லை. அது போன்ற நிலையில்தான் உள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதேபோல, கடந்த 2024 ஆம் ஆண்டு சம்பா அறுவடையிலும் ஏறத்தாழ 40 சதவீதமும் மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதற்கு முந்தைய 2023 ஆம் ஆண்டிலும் மகசூல் இழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால், பிரிமிய தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்த விவசாயிகளில் பெரும்பாலானோருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டில் 4 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 365 விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 1.13 கோடி இழப்பீடு கிடைத்தது. இதேபோல, 2024 ஆம் ஆண்டில் ரூ. 43.11 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால், 2 ஆண்டுகளாக பயிர் காப்பீடு செய்தும் ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே நிலவுகிறது.
இருப்பினும் தற்போதைய சம்பா பருவத்திலும் 1.77 லட்சம் ஏக்கருக்கு 58 ஆயிரத்து 255 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். நடப்பாண்டாவது பயிர் காப்பீடு இழப்பீடு கிடைத்தால்தான் மகசூல் இழப்பை ஈடு செய்ய முடியும். எனவே, நடப்பாண்டு பயிர் காப்பீடு கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.