தஞ்சாவூர்: வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 36 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இதை மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கிலேயே நடந்து கொள்கிறது என்று அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு  முன்னாள் பொதுச் செயலர் தாமஸ் பிராங்கோ தெரிவித்தார்.



தஞ்சாவூரில் பாரத ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற் சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பின் ஆறாவது பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் பொதுச்செயலர் தாமஸ் பிராங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:

வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 36 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இதை மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கிலேயே நடந்து கொள்கிறது. மத்திய அரசிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஊதியக் குழு போடப்படும் போது, ஓய்வூதியமும் உயர்த்தப்படுகிறது. இதேபோல, ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி, சிட்பி வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது.

ஆனால், பாரத ஸ்டேட் வங்கி உள்பட வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு ஓய்வு பெறும்போது கிடைக்கக்கூடிய ஓய்வூதியம் மட்டுமே தொடர்கிறது. மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்ற நிலைக் குழுப் பரிந்துரைப்படி, ஓய்வூதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்துவதை அமல்படுத்த வேண்டும்.

வங்கிகளில் கடன் கொடுப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஏற்படுத்தியுள்ளன. வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றுக்கு விதிமுறைகள் கடுமையாக உள்ளன. விவசாயக் கடனைத் திரும்பச் செலுத்தாத விவசாயிகளின் வீட்டுக் கதவை தட்டுவதால், தற்கொலைகள் நிகழ்கின்றன.

ஆனால், பெருங்கடன்கள் கொடுக்கும்போது கண்டிப்பான தன்மை இல்லை. குறிப்பாக, ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவிலுள்ள 591 மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான வட்டியில் கடன் கொடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் வீட்டுக் கடன், கல்விக் கடன், விவசாயக் கடனுக்குக் கிடைப்பதில்லை. கடனை வாங்கித் திரும்பச் செலுத்தாத வாராக் கடனில் 83 சதவீதம் பெரும் பணக்காரர்களுக்கு கொடுத்த கடன் என்பதை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடன் கொடுக்கும் கொள்கைகளை மாற்ற வேண்டும். பெரும்பான்மை மக்களுக்குக் கடன் கொடுக்கும் விதத்தில் பொதுத் துறை வங்கிகளை விரிவாக்க வேண்டும். கூடுதலாகக் கிளைகளைத் திறக்க வேண்டும். அலுவலர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம், இந்தியா முழுவதும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் முதுநிலை துணைத் தலைவர் ஜி. கிருபாகரன் கூறியதாவது: பொதுத் துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. கீழ் நிலை பணிகள் அனைத்தும் அயல் பணியில் விடப்படுகிறது. இதனால், ஏழை, கிராம மக்கள், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு நேரடியாக தலையிட்டு, கீழ்நிலை வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

வங்கிகளில் முன்பு அந்தந்த மாநில, மாவட்ட மக்கள் பணி நியமன வாய்ப்பைப் பெறுவர். இப்போது, எந்த மாநிலத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும், வேலைவாய்ப்பு என்கிற போது, பல மாநிலங்களிலிருந்து தகுதியற்ற, நெறியற்ற முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால், தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. இதன் மூலம், மறைமுகமாகப் பொதுத் துறை வங்கிகள் மீது மக்கள் வெறுக்கிற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்துக்கு சங்கத் தலைவர் எஸ்.பி. ராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.வி. சந்திரசேகரன், ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலர் டி. சிங்காரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.